புரதச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருள்களில் மிக முக்கியமானது பனீர். பாலில் இருந்து பெறப்படும் பனீர் போன்றே, சோயா பீனில் இருந்து பெறப்படும் டோஃபுவும் (Tofu) புரதச்சத்து நிறைந்தது. தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் இந்த டோஃபுவுக்கு வெஜிடேரியன்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், அனைவரிடமும் பெரும் வரவேற்பு உள்ளது. மிக எளிதான முறையில் நம் வீட்டிலேயே டோஃபு தயாரிக்க முடியும். அதற்கான எளிய முறைகளைப் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
1. சோயா பீன்ஸ் – 3 கப்
2. எலுமிச்சை சாறு – 75 மிலி
செய்முறை
* மூன்று கப் சோயா பீன்ஸை 12 கப் அளவு தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
* காலையில் நீரை வடித்த பின் சோயாபீன்ஸை ப்ளெண்டரில் போட்டு, 8 கப் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
* அரைத்து எடுத்த சாற்றை அடுப்பில் வைத்து, மீடியம் வெப்பநிலையில் சூடு படுத்தவும். மேலே நுரை சேராமல் பார்த்துக்கொள்ளவும்.
* அதிக நுரை வர ஆரம்பித்த பின் அடுப்பில் இருந்து இறக்கவும். அந்தப் பாலை சிறிது நேரத்திற்குக் குளிரவிடவும்.
* பின் மீண்டும் பாலை அடுப்பில் வைத்து 7 முதல் 10 நிமிடங்கள் வரை காய்ச்சவும்.
* அடுப்பில் இருந்து பாலை இறக்கிய பின், ஒரு பாத்திரத்தின் மீது துணி ஒன்றை வைத்து, அதில் இந்தப் பாலை ஊற்றி நன்றாகப் பிழிந்து கொள்ளவும்.
* தற்போது இந்தப் பாலை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்து, 180 டிகிரி ஃபேரன்ஹீட்டில் வைத்து சூடுபடுத்தி, பின் அதனுடன் 1 கப் தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து, அடுப்பை அணைக்கவும்.
* சிறிது நேரத்துக்குப் பின் சூடு குறைந்ததும் அதனை துணி அல்லது வடிகட்டி கொண்டு முழுவதும் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
* தற்போது டோஃபு தயாராகிவிடும். இதனை கெட்டியாகும் வரை பிழிந்து எடுத்து, 20 நிமிடங்களுக்குப் பின் தேவையான அளவில் வெட்டி எடுத்து, சமையலில் பயன்படுத்தலாம்.