ஓலா ,உபர் மற்றும் செயலி மூலமாக கால் டாக்ஸி சர்வீஸ் வழங்கும் நிறுவனங்களுக்கு இந்திய அரசாங்கம் அதிகரித்துவரும் கஸ்டமர் புகார்களின் எதிரொலியாக எச்சரித்துள்ளது. நியாயமற்ற விலை ஏற்றம் மற்றும் கேன்சல் சார்ஜ் போன்றவற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் ஒரு பக்கா விதிமுறை குறிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயலி மூலமாக கால் டாக்ஸி சர்வீஸ் வழங்கும் நிறுவனங்களுக்கு விலை மற்றும் ரத்து கட்டணங்களை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கொள்கைகளை வெளிப்படுத்துமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
விலைவாசி உயர்வு, கேன்சல் ரைடு சார்ஜ், AC இயக்க மறுக்கும் ஓட்டுனர்கள் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி நியாயமற்ற முறையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஓலா, உபர் போன்ற கேப் ஒருங்கிணைப்பாளர்கள் மீது நுகர்வோர் புகார்கள் குவிந்தன. இதன் எதிரொலியாக நுகர்வோர் விவகார அமைச்சகம் இந்த நிறுவனங்களுடன் கூட்டத்தை நடத்தி இது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய பிரச்சினைகளாக 1.விலைவாசி மற்றும் பெட்ரோல் விலை உயர்வால் கட்டணத்தை அதிகமாக வசூலித்தல்.
2. ஓட்டுநர்கள் தூரத்தை காரணம்காட்டி அடிக்கடி சவாரி ரத்து செய்து கேன்சல் சார்ஜ் வசூலித்தல்.
3. வண்டியில் AC இயக்க மறுத்தல் மற்றும் இயக்கினால் அதற்கு தனி சார்ஜ் வசூலித்தல்.
மேலும், அரசாங்கத்தின் பார்வையில் வந்த மற்றொரு புதிய சிக்கல், பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கான வேறுபட்ட விலை நிர்ணயம். கேப் நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களை கவர குறைந்த கட்டணத்தையும் பழைய வாடிக்கையாளர்களுக்கு உயர்த்திய கட்டணத்தையும் வசூலிக்கின்றனர். இந்த வேறுபட்ட கட்டணத்தை நிர்ணயம் செய்ய அவர்களது செயலிகளில் “ஸ்பெஷல் அல்காரிதம் ” பயன்படுத்துகின்றனர். மேலும், இதுபோன்ற பல நியாயமற்ற நடைமுறைகளை கேப் நிறுவனங்கள் பயன்படுத்தி மக்களிடம் விபூதி அடித்து விடுகின்றனர்.
சமீபமாக நாடு முழுவதிலும் உள்ள பல நகரங்களில் ஒருங்கிணைப்பாளர்கள் விலை உயர்வை அறிவித்துள்ளனர். இந்த விலை உயர்வுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை நிறுவனங்கள் காரணம் காட்டுகின்றனர். இந்த விவகாரம் பற்றி நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் செயலாளர் ரோகித் குமார்,” இந்த நிறுவனங்கள் மீது வரும் நுகர்வோர் புகார்களை புள்ளி விவரங்களோடு தெரிவித்தோம். அவர்களின் சிஸ்டத்தை மேம்படுத்தி நுகர்வோர் புகார்களை சரிசெய்ய நாங்கள் நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளோம் . மேலும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் நிதி காரே “நுகர்வோர் உரிமைகளை மீறும் கேப் நிறுவனங்களின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை தவிர்க்க ஆணையம் ஒரு ஆலோசனையை வெளியிட வாய்ப்புள்ளது” என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் உபர் இந்தியா மற்றும் தெற்காசியாவின் மத்திய செயல்பாடுகளில் தலைவர் நித்திஷ் பூசன் , ” நுகர்வோர் விவகாரத் துறையின் பரிந்துரைகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் செயலிகளில் உள்ள குறைபாடுகளை அப்டேட் செய்து வாடிக்கையாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு ஒரே மாதிரியான தேர்வு தளமாக இருக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.மேலும் அவர்களுக்கு சிறந்த சவாரியை வழங்க தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவில் தொடர்ந்து முதலீடு செய்வோம்” என்றார்.