துவண்டு நிற்கும் நேரத்தில் தோளில் கைப்போடும் நண்பனை போல அரவணைப்பு அளிக்கக் கூடியது, பிரதீப் குமாரின் குரல். இன்று அவரது பிறந்தநாள். பிரதீப் குரலில் நம்மை சிலிர்க்க வைத்த பாடல்கள் இதோ.
`மரகத நாணயம்’ படத்தில் வரும் நீ கவிதைகளா… பாடலில் காதலியை வர்ணிக்கும் பிரதீப் குரலில் ஒரு ஏக்கமும் திளைப்பும் தென்படும்.
பிரதீப் பாடல்களைப் பாடுவது மட்டுமில்லை, இசையமைக்கவும் செய்திருக்கிறார். `மேயாத மான்’ படத்தில் இரண்டு பாடல்கள் இசையமைத்துள்ளார். மேகமோ அவள்… காதல் ததும்பும் அவரின் குரலில் மற்றுமொரு பாடல்.
பிரதீப்பின் அப்பா காவல்துறை கண்காணிப்பாளர், அம்மா கர்னாடிக் சங்கீத ஆசிரியர். அதனாலோ என்னமோ பிரதீப் இசையோடே வளர்ந்தார்.
`குக்கூ’ படத்தின் ஆகாசத்தை நான் பாக்குறேன்…. பாடல் அது போலான மேஜிக் நிகழ்த்தும் ஒன்று. இதுவரை நாம் அறிந்திடாத உலகை இந்தப் பாடலில் பிரதீப்பின் குரல் காண்பிக்கிறது.
`அட்டகத்தி’ படத்தில் வரும் ஆசை ஒரு புல்வெளி… பாடல் தான் முதன்முதலில் பிரதீப்பை பலரிடம் கொண்டு சேர்த்த பாடல்.
`96′ படத்தில் வரும் கரை வந்த பிறகே… பாடலில் வாழ்வின் ஆழத்தை பிரதீப்பின் குரலில் கேட்க முடியும்.
`கபாலி’ படத்தில் வரும் மாய நதியின்று மார்பில் வழியுதே… பாடலை அனந்துடன் இணைந்துப் பாடியிருப்பார். `எனக்குள் ஒருவன்’ படத்தில் வரும் பூ அவிழும் பொழுதில்… பாடலில் பிரதீப்பின் குரல் வளைந்து நம்மை ஈர்க்கும்.
`மெட்ராஸ்’ படத்தில் ஆகாயம் தீப்பிடிச்சா… மற்றும் வடசென்னையின் கார்குழல் கடவையே… ` ஜெய்பீம்’ படத்தில் தலைகோதும் இளங்காற்று பாடல்… இப்படி பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
ஒருபோதும் நம் மனதை விட்டு விலகாத பாடல்களை கொடுத்த மாயக் குரலோனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!