வட்டியைக் கட்ட முடியாமல் சிக்கித் திணறும் தன் குடும்பத்தைப் பார்த்து வளரும் மகேஷ் பாபு, எப்படி அமெரிக்காவில் வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிக்கிறார் என்பதுதான் `சர்காரு வாரி பாட்டா’வின் ஒன்லைன். உண்மையான ஒன்லைனைச் சொன்னால் ஸ்பாய்லராகிவிடும் என்பதால், இப்போதைக்கு இந்த ஒன்லைன் போதுமானது.
அமெரிக்காவில் மஹி ஃபைனான்ஸ் என்ற பெயரில் அமெரிக்கர்களிடம் வட்டிக்கு விட்டு செல்வந்தராக வாழ்கிறார் மகேஷ் பாபு. கீர்த்தி சுரேஷைக் கண்டதும், ‘மாங்கல்யம் தந்துனானா’ மனதில் ஒலிக்க காதல் வந்துவிடுகிறது. கறாரான மகேஷ் பாபுவே மனம் இறங்கி, கீர்த்தி சொல்லும் பொய்க்கதைகளை உண்மையென நம்பி பணத்தைத் தருகிறார். பின்னால், ஒரு நாள் எல்லாம் பொய் எனத் தெரியவர, கீர்த்தியின் பூர்வீகம் தெரிய வருகிறது. தான் கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்க விசாகப்பட்டினத்துக்கு வருகிறார். கீர்த்தியின் தந்தையான சமுத்திரகனிக்கும் மகேஷுக்கும் கண்டதும் மோதல். ‘கொடுத்த காசைத் திருப்பிக்கொடுங்க’ என மகேஷ் நச்சரிக்க, அந்தப் பணம் எவ்வளவு, ஏன் இவ்ளோ பெரிய பிரச்னை, அடுத்த என்ன நடக்கிறது என்பதாகச் செல்கிறது இந்த ‘சர்காரு வாரி பாட்டா’.
தெலுங்குத் தேசத்தில் நடக்கும் ஒரு பிரச்னைக்கான மீட்பராய் மீண்டும் அவதரித்திருக்கிறார் மகேஷ் பாபு. ‘சரிலேரு நீக்கெவரு’வில் மிலிட்டரிக்காரர்; ‘மகரிஷி’யில் அமெரிக்காவின் CEO; ‘பரத் அனே நேனு’வில் ஆக்ஸ்ஃபோர்டில் படிக்கும் மாணவர் என ஒரு ஊருக்குள் புதிதாக நுழையும் கதாபாத்திரம் என்பது மகேஷுக்கு ஃபிளைட் வந்த கலை. அவருக்கும் சலிப்பதில்லை; நமக்கும் சலிப்பதில்லை என நம்பப்படுகிறது. இளமைத் துள்ளலுடன் டான்ஸ் ஆடுவது; கொத்துச் சாவியுடன் குடலை உறுவி ரத்தக்குளியல் போடுவது; டேட்டிங்கை வைத்தே பன்ச் டயலாக் பேசுவது என வழக்கமாகத்தான் செய்யும் எல்லாவற்றையும் இதிலும் செய்திருக்கிறார். வில்லனாக சமுத்திரகனி. மகேஷ் பாபுவால் கடுப்பாகி கோபத்தின் உச்சிக்குச் செல்லும் கதாபாத்திரம். சிறப்பாகவே செய்திருக்கிறார். அவரின் உண்மையான குரல் நமக்கு பரிச்சயம் என்பதால், அந்த டப்பிங் குரல் மட்டும் சற்றே அந்நியப்பட்டு நிற்கிறது.
கீர்த்தி சுரேஷுக்கு படத்தின் ஆரம்பத்தில் மட்டும் கொஞ்சம் சொல்லிக்கொள்ளும்படி காட்சிகள் வைத்திருக்கிறார்கள். ‘கப் அப்புறம் கொடு, இப்ப கம்பெனி கொடு’ என்னும் டோனிலேயே கீர்த்தி சுரேஷை இன்டர்வெல்லுக்குப் பின்னால் டீல் செய்கிறார் மகேஷ் பாபு.
மகேஷ் பாபுவுக்கு காலை யார் மீதாவது போட்டுக்கொண்டு தூங்கினால்தான் தூக்கம் வரும் என்பதால், கீர்த்தி சுரேஷை அந்தத் திருப்பணிக்கு அழைக்கிறார். கீர்த்தி சுரேஷின் மாமாவான சுப்புராஜும் பிளாக்மெயில் காரணமாக இதற்கு உதவுகிறார். தினசரி இரவு 8 மணி ஆனதும் சுப்புராஜு, கீர்த்தியை மகேஷ் பாபு வீட்டில் விட்டுவிட்டு, காலையில் கூட்டிவந்துவிடுவார். இடையே இரண்டு நாள்கள் மகேஷ் பாபு கூப்பிடாமல் விட, கீர்த்தி சுரேஷே ஏன் இன்னும் கூப்பிடவில்லை என சுப்புராஜுவுக்கு போன் செய்து அழைத்துப் போகச் சொல்கிறார். அதாவது அவருக்கு மகேஷ் பாபு மீது காதல் வந்துவிட்டதாம்.
இப்படியாக நீளும் இரண்டாம் பாதியில் இது எந்த வகை Stockholm Syndrome என யோசித்துக்கொண்டே இருந்ததால் க்ளைமேக்ஸ் வந்து நம்மை காப்பாற்றுகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த க்ரிஞ்சு குடோன்களை எல்லாம் காமெடி என நினைத்து சினிமா படைப்பாளிகள் செய்துகொண்டிருப்பார்கள் எனத் தெரியவில்லை. அக்கட தேசமே, கொஞ்சமாவது நெருடல் இல்லாமல் படம் பார்க்கவிடுங்கள்.
இவர்கள் போக வெண்ணிலா கிஷோர், நதியா, தணிகல பரணி ஆகியோருக்கு முக்கியமான வேடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ‘கலாவதி’ பாடல் ஆடியோ வெர்சனே வெறித்தன ஹிட் என்பதால் படத்திலும் அட்டகாசமாக இருக்கிறது. கிருஷ்ணா, ஜோனிதா காந்தி குரல்களில் வரும் ‘மா மா மகேஷா’ ரகளையான குத்துப் பாடல். பின்னணி இசையிலும் தமன் பக்கா.
இந்தியாவில் சமீப காலங்களாக பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடி கடன்களை எளிதாக ரைட் ஆஃப் செய்யும் அரசு ஏன் பாவப்பட்ட மிடில் கிளாஸ், ஏழைகள், விவசாயிகள் வாங்கும் சொற்ப கடனைக் கட்ட வைப்பதில் அவ்வளவு முனைப்புக் காட்டுகிறது என்பதை மையமாக வைத்து கதை எழுதி திரைக்கதை அமைத்திருக்கிறார் பரசுராம். கமர்ஷியல் படத்துக்கான பக்காவான ஒன்லைன்தான் என்றாலும், அதற்கு முன்னும் பின்னும் இணைத்திருக்கும் காட்சிகள் ஒன்று காலாவதியாக இருக்கின்றன அல்லது போதாமையாக இருக்கின்றன.
அரசு வட்டிக் கொடுமையால் குடும்பத்தையே இழக்கும் மகேஷ் பாபு பெரிதானதும், வட்டிக்காசு கொடுக்க முடியாதவர்களை தேடிப் போய் அடி வெளுக்கிறார். இப்படியான நகைமுரணுடன்தான் படமே ஆரம்பிக்கிறது. காதல் காட்சிகளை அப்படியே பிளாக் & ஒயிட்டில் எடுக்கும் அளவுக்கு அவ்வளவு அரதப் பழசாக அவை விரிகின்றன. பாப்கார்ன் வாங்கிய கையோடு வருபவர்களுக்கு க்ளைமேக்ஸ் என்றால் வாங்கிய பாப்கார்ன் வீணாகிவிடுமே என்பதற்காகவே இரண்டாம் பாதியில் வேண்டா வெறுப்பாக காமெடி என்கிற பெயரில் காட்சிகளை நீட்டி முழக்கியிருக்கிறார்கள். டிக்கெட்டே வீண்தானோ என்று நாம் யோசிக்கும் தறுவாயில் ஒருவழியாய் வருகிறது க்ளைமாக்ஸ். 2.45 மணிநேரத்திற்கு படம் எடுக்கலாம், தவறே இல்லை. ஆனால், அந்த நேரத்தை நிரப்பக் கொஞ்சமேனும் சிரத்தையெடுத்து சுவாரஸ்யமாகக் காட்சிகளைக் கோக்க வேண்டும். அங்கேதான் சொதப்பியிருக்கிறது இந்தப் படம்.
தெலுங்குப் படம் என்றாலே மினரல் வாட்டரைக் கூட மசாலாவுடன் கேட்கும் ரசிகர்களுக்கு ஏற்ப சண்டைக் காட்சிகளை பட்டாசாய் வைத்திருக்கிறார்கள். வலையைப் பிரித்துக்கொண்டு கடற்கரையில் சண்டையிடுவது; லாரியிலேயே பல தடைகளைத் துவம்சம் செய்வது; ஜாக்கே இல்லாமல் அடியாளை வைத்து கார் டயரைக் கழற்றுவது என ஒவ்வொரு சண்டையும் மாஸ் ரகம். ஆனால், அவற்றுக்கு எழுதப்பட்ட பன்ச் வசனங்கள்தான் சிரிப்பை வர வைத்துவிடுகின்றன.
‘முயல் கூட புலி டேட்ட்டிங் போனா, முயல் கதி என்னாகும் தெரியுமா’ என மாஸாக கேட்டுவிட்டு; சில காட்சிகள் கடந்து ‘அங்க பொன்மணி சொன்னனா, இங்க கண்மணி போட்டுக்க; என்பதாக ‘திமிங்கலத்துக்குக்கூட சின்ன மீன்கள் டேட்டிங் போனா என்ன ஆகும் தெரியுமா’ என அடுத்த வசனம் வந்து காதுகளில் விழுகிறது. அதிலும் அந்த ‘வயாகரா’ பன்ச் எல்லாம் அவசியம்தானா இயக்குநரே?!
மாஸ் படம், மாஸ் ஹீரோ என்றாலும் பார்வையாளரை கனெக்ட் செய்யவில்லை என்றால் குட்பை சொல்லும் நிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டார்கள் என்பதற்கான இன்னுமொரு சாட்சியாகியிருக்கிறது இந்த `சர்க்காரு வாரி பாட்டா’.