புதுடெல்லி: தான் போற்றும் அரசியல்வாதி எல்கே அத்வானி என்று கூறியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.
இந்தியாவில் தேர்தல் திட்டமிடுதலுக்கு புகழ்பெற்ற ஐ-பேக் என்ற அமைப்பின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர். மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியில் பங்கேற்று வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர், இப்போது பிஹாரை மையமாக கொண்டு புதிய கட்சி ஒன்றை தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதன் முதல்கட்டமாக மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி 3,000 கிமீ பாதயாத்திரை பயணத்தை தொடங்க உள்ளார்.
இதனிடையே, நேற்று தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரசாந்த் கிஷோர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது, தான் பெரிதும் மதிக்கும் அரசியல்வாதி எல்கே அத்வானி என்பதை அவர் வெளிப்படுத்தினார்.
அந்த நிகழ்ச்சியில் கேள்வி ஒன்று பதிலளித்த அவர், தான் போற்றும் அரசியல்வாதி என்று முதலில் குறிப்பிட்டது மகாத்மா காந்தி. பின்னர் உயிருடன் உள்ள ஒருவரை குறிப்பிடச் சொன்னபோது தான், எல்கே அத்வானியை சொன்னார்.
“உயிருடன் உள்ளவர்களில் நான் போற்றும் அரசியல்வாதி, எல்.கே.அத்வானி என்பேன். இப்போது பான்-இந்தியக் கட்சியாக மாறியுள்ள பாஜகவின் அடிப்படை அமைப்பு மற்றும் கட்டமைப்பின் பின்னணியில் இருந்தவர் அத்வானி” என்று பிரசாந்த் கிஷோர் கூறினார். அதேநேரம் இதே நிகழ்வில் எதிர்க்கட்சிகள் குறித்து பேசும்போது, எதிர்க்கட்சியாக எப்படி நடந்துகொள்வது என்பதை காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.
பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டே காங்கிரஸில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை பலமுறை சந்தித்து பேசினார். ஆனால் காங்கிரஸில் இணையவில்லை. அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
திடீர் திருப்பமாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையக்கூடும் என மீண்டும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி தீவிர ஆலோசனை நடத்தினார். ஆனால் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தெலங்கானா ராஷ்ட்ர சமதி கட்சிக்கு தேர்தல் பணியாற்ற திடீர் என ஒப்பந்தம் செய்தது. இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியில் புயலை கிளப்பியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக பிரஷாந்த் கிஷோர் தெரிவித்தார்.