சென்னையில் வசித்து வந்த நண்பருக்கு திருச்சியில் சொந்தமாக வீடு உள்ளது. அவருடைய மின் கட்டணம் வசூலிக்கப்படும் முறையில் தவறு இருப்பதாக நண்பர் கருதினார். அவரால் உடனடியாக திருச்சிக்கு செல்ல முடியாது. அதனால் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் தனது விடுமுறை நாளில் மின்சார வாரியத்தின் tangedco.gov.in இணையதளத்தில் தமது புகாரை பதிவிட்டார். அரசு அலுவலகங்களில் இந்தப் புகாரினை பார்ப்பார்களா என்ற சந்தேகம் அந்தப் புகாரை பதிவிடும் போது நண்பருக்கு இருந்தது. என்றாலும் முயன்றுதான் பார்ப்போமே என்று அந்தப் புகாரை பதிவிட்டார்.
அவருக்கு மதியம் ஒரு மணி அளவில் திருச்சி சீனிவாச நகர் மின் வாரியத்தில் பணிபுரியும் மின் ஊழியர் மகாதேவன் என்பவரிடமிருந்து கைபேசி அழைப்பு வந்தது. அந்தப் புகார் குறித்து கேட்டறிந்த மின் ஊழியர் உடனடியாக அந்த புகாரை தீர்ப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறினார். இதன் மூலம் இரண்டு நிமிடத்தில் நண்பரின் புகாருக்கு தீர்வு கிட்டியது. நண்பருக்கு இவ்வளவு சீக்கிரம் தனது புகாருக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பவே முடியவில்லை. அதுவும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் 3 மணி நேரத்தில் தீர்வு கிடைத்ததை பார்த்து அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவருடைய ஆச்சரியம் அத்துடன் நிற்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவே மின்வாரியத்திலிருந்து அவருக்கு மற்றொரு அழைப்பு வந்தது. அவரிடம் பேசிய மற்றொரு ஊழியர் அவருடைய புகார் திருப்திகரமாக முடித்து வைக்கப்பட்டுள்ளதா என்று கேட்டறிந்தார். நண்பரின் ஒப்புதலுடன் அந்த புகார் முடித்து வைக்கப்பட்டது.
சற்று நேரத்தில் நமது நண்பரின் கைப்பேசிக்கு புகார் முடித்து வைக்கப்பட்ட செய்தியும் அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பலவித சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் வாடிக்கையாளர்களின் புகாரை பதிவு செய்வதற்கும் பிரத்தியேக வலைதளங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்தச் சேவை மக்களுக்கு பல வகைகளில் உதவிகரமாக இருந்து வருகிறது.
ஆன்லைன் சேவைகள் மூலம் கிடைக்கும் நன்மைகள்:
நேரடியாக அரசு அலுவலகங்களில் சென்று புகார் தெரிவிக்கும்போது அந்தப் புகார் ஏற்கப்படாமலும் போகலாம். அந்தப் புகார் ஏற்கப்பட்டால் கூட சில சமயங்களில் அந்தப் புகாருக்கான தீர்வுக்கு எந்தக் காலக் கெடுவும் இருக்காது. ஆனால் அதுவே ஆன்லைன் மூலம் புகார் பதிவிடும்போது புகார் தெரிவிக்கப்பட்ட தேதி மற்றும் நேரம் பதிவாகிவிடும். அந்தப் புகார் தெரிவிக்கப்பட்டதின் சான்றாக வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படும்.
பெரும்பாலான அரசு அலுவலகங்களில் இதுபோன்ற பதியப்பட்ட புகார்களை முடித்து வைக்க காலக்கெடு வைத்துள்ளனர். அந்தக் காலக் கெடுவுக்குள் புகாரினை அரசு ஊழியர் முடித்து வைக்க நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்வர். மேலும் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற விவரங்களை வலைதளத்தில் பதிவிடுவார்கள். நேரடியாக சென்று புகார் பதியும் பொழுது புகாரின் தற்போதைய நிலையை அறிய முடியாது. ஆனால் ஆன்லைன் புகார்களில் நடவடிக்கை விவரங்கள் பதியப்படுவதால் வாடிக்கையாளர் சுலபமாக தமது புகாரின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள முடியும்.
ஆன்லைன் சேவைகளின் ஆதாயங்கள் பற்றி தற்போது பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வைத்து அறிந்து கொள்ள முடியும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்போர்ட் வாங்குவது என்பது குதிரைக் கொம்பாகும். 10 மணிக்கு திறக்கும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வாடிக்கையாளர்கள் அதிகாலை 4 மணிக்கு வந்து வரிசையில் நிற்க தொடங்கிவிடுவார்கள். அவ்வளவு சீக்கிரம் வந்தும் கூட கூட்டம் அதிகமாக இருந்தால் அவர்களால் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க முடியாது. மீண்டும் அடுத்த நாள் இன்னும் சீக்கிரம் வந்து முயற்சிக்க வேண்டும். பாஸ்போர்ட் கிடைப்பதற்கும் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விடும்.
ஆனால் தற்போது ஆன்லைன் நடைமுறை வந்தபிறகு நமது நாட்டில் எந்த பாஸ்போர்ட் அலுவலகத்திலும் கூட்டம் சேர்வதில்லை. அதிகப்பட்சம் 15 நாள்களில் பெரும்பாலான பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன. பாஸ்போர்ட் ஆபீஸ்களில் பாஸ்போர்ட் வாங்குவதற்கு என்று பல இடைத்தரகு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. அவை மக்களிடம் அதிக பணத்தை வசூலித்து லாபம் ஈட்டி வந்தனர். ஆனால், ஆன்லைன் வருகைக்குப் பிறகு இதுபோன்ற இடைத்தரகர்களின் தலையீடு பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒழிந்து விட்டது. இதன் மூலம் ஆன்லைன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை சுலபமாக அறிய முடியும்.
தமிழக அரசு அலுவலகங்களில் ஆன்லைன் சேவைகள்!
தமிழக அரசு பத்திரப் பதிவு சார்பாக www.tnreginet.gov.in என்ற வலைதளத்தின் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்பு வில்லங்க சான்றிதழ் பெறுவதற்கு பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். ஆனால் தற்போது வில்லங்க சான்றுகளை உடனடியாக எந்த கட்டணமும் இல்லாமல் ஆன்லைன் மூலம் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. மேலும் பல்வேறு கட்டண மற்றும் கட்டணமில்லா சேவைகள் பத்திரப் பதிவுத்தறை அலுவலகம் மூலம் இந்த இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் தமிழக அரசின் சார்பாக பல்வேறு வலைதளங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த இணையதளத்தின் மூலம் பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஜாதி சான்றிதழ், வேலையில்லா சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வீட்டு முகவரி சான்றிதழ், விதவைகளுக்கான சான்றிதழ், முதல் பட்டதாரிகளுக்கான சான்றிதழ் போன்ற பல்வேறு சேவைகளை இந்த இணையதளங்களின் மூலம் பெற முடியும். இந்தச் சேவைகளுக்கு பெரும்பாலும் எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
சிலவகை சேவைகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சேவைகளுக்கு தேவையான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். இதன்மூலம் ஆவணங்கள் தொலைந்து போகும் வாய்ப்புகளும் இல்லை.
தற்போது மாறிவரும் டிஜிட்டல் காலத்தில் வாடிக்கையாளருக்கு பயனளிக்கும் ஆன்லைன் சேவைகளை அனைவரும் பயன்படுத்தலாம். இன்னும் மக்களில் பெரும்பாலானவர்கள் அரசு அலுவலகங்களில் சேவைகள் பெறுவதற்கு இடைத்தரகர்களை நாடுகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஆண்டவன் கட்டளை திரைப்படம் இடைத் தரகர்களால் ஏற்படும் சிக்கலை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
மக்கள் தங்கள் குறைகளை தீர்ப்பதற்கு நேரடியாக அரசு அலுவலகங்களை நாடுவதே சாலச் சிறந்ததாகும். அவ்வாறு அரசு அலுவலகங்களை நாடுவதற்கு பிரத்தியோக வலைதளங்கள் சுலபமான வழிமுறையாகும். நமது குறைகளை களைவதற்காக அரசு அலுவலகங்களில் பல சேவை மனம் கொண்டவர்கள் காத்திருக்கின்றனர். அவர்களின் உதவியை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வது மக்களின் கையில்தான் உள்ளது.
ஆனால், அனைத்தும் அத்தனை சுலபமாக நடந்துவிடுவதில்லை என்பதே உண்மை. இதில், பல துறைகளின் ஆன்லைனில் பதிவு செய்தாலும் பதில்கள் கிடைப்பதில்லை. ஆன்லைன் மூலம் முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக பதில் கிடைக்கும். ஒருவேளை கிடைக்கவில்லை என்றால், தாங்கள் இதற்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் டிஜிட்டல் ரீதியாக பதிவாகிவிடும். அதை வைத்து மேல்முறையீடு, நீதிமன்றம் என்று நாடி தீர்வைப் பெற முடியும்.