சென்னை:
சென்னையில் ஆட்டோ கட்டணம் 2013-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. 1.8 கி.மீ தூரத்திற்கு குறைந்த பட்ச கட்டணம் ரூ.25ம், கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12ம் நிர்ணயிக்கப்பட்டது.
இக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகிறது. அப்போது பெட்ரோல் விலை ரூ.70ம், கியாஸ் விலை ரூ.30ம் ஆக இருந்தன.
இதற்கிடையில் பல முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கியாஸ் விலையும் அதிகரி த்து உள்ளது. தற்போது பேட்ரோல் லிட்டர் ரூ.111ம், கியாஸ் ரூ.70ம் ஆக உள்ளது.
இதனால் ஆட்டோ தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.
இதனால் ஆட்டோ டிரைவர்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கிறார்கள். முறையாக ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆட்டோ கட்டணத்தை மீண்டும் மறுசீரமைக்கும் பணியை போக்குவரத்து துறை தற்போது தொடங்கி உள்ளது. ஆட்டோ தொழிற்சங்கத்தினரிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டு ஆட்டோ கட்டணத்தை 1.5 கிலோ மீட்டருக்கு 50 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-
ஓலா, ஊபர் போல இணைய வழி சேவையை அரசே தொடங்கி ஏற்று நடத்த வேண்டும். நவீன முறையில் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். ஜி.பி.எஸ். டிஜிட்டல் மீட்டரை அரசு இலவசமாக வழங்க வேண்டும்.
விஞ்ஞான ரீதியில் வடிவமைக்கப்பட்ட மீட்டர் கட்டணத்தை அறிவித்திட வேண்டும். குறைந்த பட்சம் 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.50ம், கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25ம் நிர்ணயிக்க வேண்டும்.
இரவு கட்டணத்திற்கான நேரத்தை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலும், இரவு நேர கட்டணம் ஒன்றரை மடங்காக நிர்ணயிக்க வேண்டும். காத்திருப்பு கட்டணம் ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் எனவும் நிர்ணயம் செய்ய வேண்டும்.
போக்குவரத்து நெரிசலின் போது ஏற்படும் எரிபொருள் விரயம், நேர விரயம் ஆகியவற்றை ஈடு செய்திடும் வகையில் காலக்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.