கடந்த சில தினங்களாக விளையாட்டு ஆர்வலர்கள் ஜோதி யாரஜியைத்தான் கூகுளில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மே 10-ம் தேதி சைப்ரஸில் நடந்த சர்வதேச தடகளப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டிய ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றதோடு, 20 ஆண்டுக்கால தேசிய சாதனையையும் முறியடித்திருக்கிறார் ஜோதி யாரஜி. 2002-ல் தடைதாண்டிய 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 13.38 நிமிடங்களில் தங்கம் வென்றார் அனுராதா பிஸ்வால். அதே தூரத்தை 13.23 நிமிடங்களில் ஓடி முடித்து, தங்கம் வென்று, அனுராதாவின் ரெக்கார்டை முறியடித்து மொத்த இந்தியாவையும் தன்னை கவனிக்க வைத்திருக்கிறார் ஜோதி.
ஜோதி யாரஜி ஆந்திராவைச் சேர்ந்தவர். 22 வயது. அப்பா சூர்ய நாராயணா விசாகப்பட்டினத்திலிருக்கும் தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். அம்மா வீட்டு வேலை பார்த்து வருகிறார்.
“ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தன்னுடைய நாட்டுக்குத் தங்கப்பதக்கம் வாங்கித்தர வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருக்கும். எனக்கும் அப்படித்தான். என்னுடைய குடும்பத்தின் பொருளாதார பிரச்னைகள் என்னுடைய லட்சியத்துக்குத் தடைபோட முடியாது என்பதில் நான் தீர்மானமாக இருந்தேன். சைப்ரஸ் தடகள போட்டி என்னுடைய முதல் சர்வதேச பந்தயம்” என்கிற ஜோதியின் ஆரம்ப ஓட்டம், அன்றைய தினம் நம்பிக்கை தருவதாக இல்லை. ஏழு போட்டியாளர்களில் ஜோதியின் ஆரம்பம் மோசமாக இருந்தது என்றே சொல்லலாம்.
ஜோதியின் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹில்லியர் (James Hillier), ”ஆமாம், போட்டி ஆரம்பிக்கையில் ஜோதியின் ஓட்டம் மோசமானதாகவே இருந்தது. போட்டி ஆரம்பிக்கிறது என்பதைத் தெரிவிக்க இந்தியாவில் கைத்துப்பாக்கிகளை வெடிக்க வைப்பார்கள். ஆனால், சைப்ரசில் எலெக்ட்ரானிக் துப்பாக்கியைப் பயன்படுத்தினார்கள். அதன் சத்தம் ஜோதிக்குச் சரியாகக் கேட்கவில்லை. அதனால்தான், அவருடைய ஆரம்பம் அப்படி இருந்தது” என்கிறார்.
2002-ல் தடைத்தாண்டிய 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 13.38 நிமிடங்களில் தங்கம் வென்றார் அனுராதா பிஸ்வால். அதே தூரத்தை 13.23 நிமிடங்களில் ஓடி முடித்து, தங்கம் வென்று, அனுராதாவின் ரெக்கார்டை முறியடித்து மொத்த இந்தியாவையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் ஜோதி.
ஜோதியோ, ”அன்றைய தினம் என்னுடைய ஆரம்பம் சிறப்பானதாக இல்லை என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும், நான் எந்த வகையிலும் பதற்றமடையவில்லை. பந்தயத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன்” என்கிறார்.
வெற்றிக்கு ஒரு சூத்திரம் சொல்லிக் கொடுத்த ஜோதி யாரஜிக்கு நம்முடைய வாழ்த்துகள்!