பிரித்தானியாவில், ஆஸ்ட்ராசெனகா நிறுவனத் தயாரிப்பான கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஒரு பெண் திடீரென மயங்கிச் சரிய, அவரது குழந்தையோ தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த பயங்கரம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இங்கிலாந்திலுள்ள Dorset என்ற இடத்தில் வாழும் சட்டத்தரணியான Louise Atkinson, சென்ற ஆண்டு, மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆஸ்ட்ராசெனகா நிறுவனத் தயாரிப்பான கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளார்.
மறுநாள், அவர் தன் ஒன்பது மாதக் குழந்தையான Eleanor என்னும் Ellieயை குளிக்க வைத்துக்கொண்டிருந்திருக்கிறார்.
பல் மருத்துவரைக் காணச் சென்றிருந்த Louiseஇன் கணவரான James Atkinson வீடு திரும்பியபோது மனைவியையும் பிள்ளையையும் காணாததால் அவர்களைத் தேடியிருக்கிறார்.
குளியலறையின் கதவு மூடியிருக்கவே, கதவைத் தள்ளிப் பார்த்திருக்கிறார். கதவுக்குப் பின்னால் யாரோ இருப்பதால் கதவைத் திறக்கமுடியவில்லை என்பதை உணர்ந்த James, பக்குவமாக கதவைத் தள்ளித் திறக்க, அங்கே Louise சுயநினைவின்றிக் கிடக்க, குழந்தை Ellieயோ, குழந்தைகளைக் குளிக்க வைக்கும் பாத்திரத்துக்குள் கவிழ்ந்து கிடந்திருக்கிறாள்.
ஒரு கையில் குழந்தையை வாரி எடுத்து, மறுபக்கம் மொபைலில் அவசர உதவியை அழைத்தபடியே மனைவிக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளித்துள்ளார் James.
ஆனால், குழந்தையின் உடல் நீலம்பாரித்துவிட்டிருக்கிறது. அதாவது, குழந்தை Ellie ஏற்கனவே உயிரிழந்துவிட்டிருக்கிறாள்.
யாரை நோவதென கணவனும் மனைவியும் நொந்து போயிருக்கிறார்கள்!
இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை ஒன்று நடந்துவந்த நிலையில், ஏற்கனவே பலவீனமாக இருந்த Louise, தூக்கமின்மையால் வேறு அவதிப்பட்டுக்கொண்டிருக்க, அத்துடன் தடுப்பூசியின் பக்க விளைவுகளும் இணைந்துகொள்ள, குழந்தையைத் தூக்குவதற்காக குனிந்த அவர் மயங்கிச் சரிய, தண்ணீருக்குள் கவிழ்ந்த குழந்தையோ நீண்ட நேரம் தண்ணீரில் கவிழ்ந்துகிடந்ததால் மூச்சுக்குழாயில் தண்ணீர் ஏறி உயிரிழந்திருக்கிறாள், இது ஒரு விபத்து என விசாரணை அதிகாரிகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.