புதுடெல்லி: இந்திய ராணுவத்துக்கு மேலும் 12 சுவாதி ரேடார்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது பாகிஸ்தான் ராணுவம், அமெரிக்காவின் அதிநவீன ரேடார்களை பயன்படுத்தியது. இந்திய ராணுவம், பிரிட்டிஷ் தயாரிப்பு ரேடார்கள் உதவியுடன் போரை நடத்தியது. ஆனால் எதிரியின் ஆயுதங்கள் எந்த இடத்தில் உள்ளன என்பதை கண்டறிவதில் இந்திய ராணுவத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது.
இதை கருத்தில் கொண்டு எதிரிகளின் ஆயுதங்களை கண்டறியும் அதிநவீன ரேடாரை மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியது. சுவாதி என்று பெயரிடப்பட்ட இந்த ரேடாரை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தயாரித்து வருகிறது.
கடந்த 2007-ம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் சுவாதி ரேடார் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டில் ராணுவத்தில் இந்த ரேடார் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது.
சுவாதி ரேடார் மூலம் 50 கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் எதிரி நாடுகளின் பீரங்கி, ராக்கெட்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை துல்லியமாக கண்டறிய முடியும். தற்போது ரூ.1,000 கோடி மதிப்பில் புதிதாக 12 சுவாதி ரேடார்களை வாங்க ராணுவம் முடிவு செய்துள்ளது. இவை சீன எல்லையில் நிறுவப்பட உள்ளன.