இந்தி மொழி திணிக்கப்படுகின்றது என்ற கேள்விக்கே இடமில்லை எனவும், எல்லா மொழிகளும் வளர ஊக்கவிக்கப்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை பாரதியார் பல்கலைக்கழக விழாவில் பேசியுள்ளார். முன்னதாக தமிழ்நாடு உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி இந்தி குறித்து விமர்சித்து பேசிய நிலையில், ஆளுநர் தனது உரையின்போது இவ்வாறு பதில் அளித்தார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். அந்நிகழ்வில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “இந்தி மொழி தெரிந்தால் வேலை கிடைக்கும் என்றார்கள். கோவையில் பானி பூரி விற்பவர்கள் யார்?” என கடுமையாக விமர்சித்தார்.
பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கல்லூரி முதல்வர்களுடன் கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்வுகளில் நேற்றைய தினமே ஆளுநர் கலந்து கொண்டு பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் தங்கினார். இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற எந்த நிகழ்விலும் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய கல்விக் கொள்கை மற்றும் இந்தி திணிப்பு குறித்து ஆளுநர் அமர்ந்திருந்த மேடையிலேயே விமர்சனம் செய்து பேசினார்
அமைச்சர் பேசுகையில், “ஆண்களை விட பெண்களே அதிகமாக பட்டம் பெறுகின்றனர். இந்தியாவில் தமிழ்நாடு கல்வியில் முன்னிலையில் உள்ளது. உயர்கல்வியில் உயர்ந்து இருக்கிறோம். முதலமைச்சருக்கு கல்வி, சுகாதாரம் ஆகியவை இரண்டு கண்கள். அதனால் இத்துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெண்கள் படிக்கக் கூடாது என்ற ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று பெண்கள் படிப்பில் ஆர்வமாக உள்ளனர். அதுதான் திராவிட மாடல். பெரியார் மண்!
எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. விரும்புவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றார்கள். கோவையில் பானி பூரி விற்பவர்கள் யார்?” என கடுமையாக கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசுகையில், “புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற நாங்கள் தயார். தமிழ்நாடு கல்விக் கொள்கை நிறுவ முதலமைச்சர் குழு அமைத்துள்ளார். தமிழ்நாட்டின் பிரச்சனைகளை ஆளுநர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன். இந்தியை கட்டயமாக்கக்கூடாது; மூன்றாவது மொழி எது வேண்டுமானாலும் படிக்கலாம்” என பேசினார்.
இதையும் படிங்க… துளசி செடியை விற்பனை செய்து பேத்தியை படிக்க வைக்கும் 70 வயது மூதாட்டி!
தொடர்ந்து மாணவர்கள் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பட்டம் பெற்ற மாணவர் களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன் என தமிழில் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சருக்கு பதிலளித்தார். ஆளுநர் ஆர். என். ரவி தன் உரையின்போது “பட்டம் பெற்றவர்கள் புதிய வாழ்க்கையில் நுழைய போகின்றீர்கள். நம்நாடு பல்வேறு இனம், மொழி கலாச்சாரம் கொண்டது. தற்போது அது புதிய நம்பிக்கையுடன் பயணித்து கொண்டு இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் மருத்துவகல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கபட்டுள்ளது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆயஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மக்களின் உடல்நிலையில் இந்த அரசு கவனம் செலுத்துகின்றது.
மேலும் மத்திய அரசு ஒரு மொழியை (இந்தி) திணிக்க முயல்வதாக சொல்லபடுகின்றது. ஆனால் அப்படி இல்லை. புதிய கல்விக்கொள்கை தாய்மொழி கல்வியை ஊக்கப்படுத்துகிறது. மாநில மொழிகளிலேயே பாடங்கள் நடத்தப்படுகின்றது. தமிழ், சிறப்பான உயர்ந்த மொழி. `அந்தந்த மாநில மொழிகளில்தான் நீதிமன்ற வழக்காடுதல் நடைபெற வேண்டும்’ என பிரதமர் மோடியேவும் கூட சமீபத்தில் நடந்த நீதிபதிகள் கூட்டத்தில் பேசி இருக்கின்றார். ஆகவே `இந்தி மொழி திணிக்கப்படுகின்றது’ என்ற கேள்விக்கே இடமில்லை. இந்தியாவில் எல்லா மொழிகளும் வளர ஊக்கவிக்கப்படும் என தெரிவித்தார்.
புதிய கல்விகொள்கையால் தமிழ்மொழி பிற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக கற்பிக்க வாய்ப்பு எற்பட்டுள்ளது. பிற நாடுகளில் உள்ள பல்கலைகழகங்களில் தமிழ் இருக்கை அமைத்து இருப்பதை போல, இந்தியாவில் உள்ள பிற பல்கலைகழகங்களிலும் இருக்கை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும். சுப்ரமணிய பாரதி பெயரில் பனராஸ் பல்கலையில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்” எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM