இன்னொரு மசூதியை இழக்கத் தயாராக இல்லை: கியான்வாபி சர்ச்சையில் ஓவைசி கருத்து

“கியான்வாபி மசூதி தீர்ப்பு 1991 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. ஏற்கெனவே பாபர் மசூதியை இழந்துவிட்டோம். இப்போது இன்னொரு மசூதியை இழக்க நாங்கள் தயாராக இல்லை.

1991 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் படி, யாதொரு நபரும் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தையும் வேறு மதத்தினருடையதாகவோ அல்லது அதே மதத்தின் உட்பிரிவினுடையதாகவோ மாற்றக் கூடாது என்பதே சட்டம். ஆனால், வாரணாசி நீதிமன்ற தீர்ப்பு அதை முற்றிலும் சிதைப்பதாக உள்ளது” என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

சர்ச்சை பின்னணி: வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகேயுள்ள கியான்வாபி மசூதியில் மே 17-ம் தேதிக்குள் வீடியோ எடுக்கும் பணியை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதையடுத்து அங்கு களஆய்வு மேற்கொண்டு மே 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மசூதிக்குள் படம்பிடிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட விவகாரம் குறித்து வாரணாசி நீதிமன்றம் நேற்று விசாரித்தது. நீதிபதிகள் உத்தரவில், “மனுதாரர்கள் கேட்டபடி மசூதியின் உள்பகுதி, அடித்தளம் உட்பட அனைத்து இடங்களிலும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். களஆய்வுப் பணி மே 17-ம் தேதிக்குள் முடிவடைய வேண்டும்” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் அசாதுதீன் ஓவைசி, “பாபர் மசூதி இழப்பே போதும். இன்னொரு மசூதியை இழக்க நாங்கள் தயாராக இல்லை. இவ்விவகாரத்தில் அனைத்திந்திய முஸ்லிம் தனி சட்ட வாரியம், மசூதி குழு ஆகியன உச்ச நீதிமன்றத்தை நாடும் என நான் நம்புகிறேன். உத்தரப் பிரதேசத்தை ஆளும் யோகி அரசு, வழிபாட்டுத் தலங்களாஇ சர்ச்சைக்கு உள்ளாக்குவோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.