கொழும்பு: புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற போதிலும் இலங்கையில் போராட்டம் நீடித்து வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பிரதமராக ரணிலை ஏற்க பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மறுத்து வருகின்றன.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி அதிபர் மாளிகை முன்பு பொதுமக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் மீது மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து நாடு முழுவதும் பெரிய அளவில் கலவரம் வெடித்தது. மக்களின் எதிர்ப்பு வலுத்ததால் மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகும் கலவரம் நீடித்தது. மகிந்த ராஜபக்சவின் வீடு உட்பட ஆளும் கட்சி தலைவர்களின் வீடு, அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் ஆளும் கட்சி எம்.பி. உட்பட இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நெருக்கடியான சூழலில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். இவர், ஏற்கனவே 5 முறை பிரதமராகவும், 2 முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 113 உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும். பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைதி ஏற்படுத்த முயற்சி
இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளில் பிரதமர் ரணில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் ஒற்றுமையை ஏற்படுத்தவும் முயன்று வருகிறார். ஆனால், பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ரணிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மூத்த எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான சமாஜி ஜன பலவேகயா (எஸ்ஜேபி) கட்சியைச் சேர்ந்த ஹர்ஷா டி சில்வா, பிரதமராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் மட்டுமல்லாமல் 3 முக்கிய எதிர்க்கட்சிகளும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் பிரதமர் ரணில் இறங்கியுள்ளார்.
ஹர்ஷா டி சில்வா கூறும்போது, “அரசியல் விளையாட்டையும், ஒப்பந்தங்களையும் நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை. தங்களின் பாதுகாப்பையும், எதிர்காலத்தையும் உறுதி செய்யும் அரசை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். மக்கள் எதிர்பார்ப்பது பிரதமர் மாற்றத்தை அல்ல. ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றிருப்பது சரியல்ல. அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்றுதான் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். அந்தப் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு உண்டு. மகிந்த ராஜபக்சவை மாற்றிவிட்டு பிரதமர் பொறுப்பை ரணிலுக்கு கொடுத்திருப்பது சரியல்ல” என்றார்.
இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் கூறும்போது, “ரணில் விக்ரமசிங்கவின் தலைமையை நாங்கள் ஏற்கமாட்டோம். ராஜபக்ச தலைமையிலான அரசு பதவியில் தொடர்வதற்கான தகுதியை இழந்துவிட்டது” என்று தெரிவித்தனர்.
மேலும் 2 சிறிய கட்சிகளும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையை ஏற்க மறுத்துவிட்டன. ரணில் தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும் அமைச்சர் பதவிகளை ஏற்க மாட்டோம் என்றும் இலங்கை சுதந்திரக் கட்சியும் அறிவித்துள்ளது. தற்போது வரை 10-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ரணிலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் நீடிப்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அதிருப்தி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி ஒற்றுமையை ஏற்படுத்த ரணில் தொடர்ந்து முயன்று வருகிறார். இதனால், புதிய அமைச்சரவை பதவியேற்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
பணிகளை தொடங்கினார்
இந்நிலையில், நேற்று காலை பிரதமர் அலுவலகத்துக்கு வந்த ரணில் விக்ரமசிங்க பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு பணிகளைத் தொடங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது: நாட்டின் தலையாய பிரச்சினையாக எழுந்துள்ள எரிபொருள் விநியோகம், மின் விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுப்பேன். எனக்கு அளித்த பொறுப்புகளை சரிவர செய்வேன். நாடாளுமன்றத்தில் எனக்கு போதுமான ஆதரவு உள்ளது. அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சந்தர்ப்பம் வரும்போது அதைச் செய்வேன்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். அமைதியை ஏற்படுத்தி, சுமுகமான நிலையை உருவாக்க முயற்சி மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய பிரதமராக ரணில் பதவி ஏற்ற போதிலும், இலங்கையில் போராட்டம் தொடர்கிறது. அதிபர் கோத்தபய ராஜபக்ச அலுவலகம் அருகே தொடர்ந்து போராட்டம் நடத்து வருகிறது.
அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ச விலகும் வரை போராட்டத்தை தொடர்வோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு நன்றி
மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். தனது பதவிக்காலத்தில் இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவு வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பக்ளாயை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பதவியேற்ற முதல் நாளிலேயே இந்திய தூதரை பிரதமர் ரணில் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. தூதருடனான சந்திப்பின்போதும் இலங்கைக்கு உதவிய பிரதமர் மோடிக்கு, ரணில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.