சென்னை: இலங்கையில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் துயரை துடைப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, திராவிட இயக்கப் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன்பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “ஈழத்தில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு, மலையக தமிழர்களுக்கு, பூர்வீக தமிழர்களுக்கு மற்றும் அஙகு வாழக்கூடிய தமிழர்களுக்கு, தமிழகத்தில் இருந்து அவர்களது கண்ணீரைத் துடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனிதநேய நோக்கத்துடன் முடிவெடுத்துள்ளார். உடனடியாக பசிபட்டினியிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.
இந்த நோக்கத்தில் ரூ.134 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் உயர்தர அரிசி அனுப்புவதற்கும், ரூ.15 கோடி மதிப்பில் 500 டன் பால்பவுடர் அனுப்புவதற்கும், அதுபோல ரூ.28 கோடி மதிப்பில், 137 வகையான மருந்துகளை அனுப்புவதற்கும், மொத்தம் ரூ.177 கோடி மதிப்பிலான பொருட்களை அனுப்புவதற்கும் முதல்வர் ஏற்பாடு செய்திருக்கின்றார்.
அதற்கான முயற்சியிலே ஈடுபட்டு, மத்திய அரசு அதற்கு எந்தவிதமான முட்டுக்கட்டையும் போடாமல், அதை அனுப்புவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கின்றார். இந்த பொருட்கள் எல்லாம் அங்கு சென்று சேர்ந்து அவர்களுடைய துன்பம் தணிவிக்கப்படுகின்ற வேளையில், அடுத்து படிப்படியாக ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற துயரத்தை போக்குவதற்கு, அவர்களை இத்தனை ஆண்டுகாலமும் வாட்டி வதைத்த துன்பத்திலிருந்து படிப்படியாக அவர்களை விடுவிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். மத்திய அரசிடம் இதுதொடர்பாக பேசுவோம் என்று தமிழக முதல்வர் எங்களிடம் வாக்குறுதி கொடுத்தார்.
அதுமட்டுமல்ல இங்கிருந்து அதிகாரிகளை அனுப்பி, அங்கே பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை கவனிக்கவும், தமிழர்களுக்கு போய்சேர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முயற்சிகளை முதல்வர் செய்துள்ளார். தமிழக எம்.பி.க்கள் குழுவை அனுப்பி, பிரதமரைச் சந்தித்து, இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவிகள் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வேன் முதல்வர் கூறியுள்ளார். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஈழத்தமிழர்களின் பிரச்சினையில் உதவ முன்வந்திருப்பதால் நாங்கள் நிம்மதி பெருமூச்சு விடுகிறோம். ஈழத்தமிழர்களின் துயரைத் துடைப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள அத்தனை முயற்சிகளுக்கும் பாராட்டுக்கள்” என்று கூறினார்.