அரசு அலுவலகத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள், காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் நீதி கேட்டு அச்சமூகத்தினர் நேற்று விடியவிடிய இரவு முழுவதும் மிகப் பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஜம்மு – காஷ்மீரின் புட்காம் மாவட்டம் ஷேக்புரா பகுதியைச் சேர்ந்தவர்ர் ராகுல் பட். காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த இளைஞர் அங்குள்ள தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இந்த அலுவலகத்தில் நுழைந்த தீவிரவாதிகள், ராகுலை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். சக ஊழியர்கள் ராகுலை மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உறுதி செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு காஷ்மீர் பண்டிட்டுகள் திரண்டு ஜம்மு காஷ்மீரில் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். விடிய விடிய இப்போராட்டம் நடந்தது.
1990களுக்குப் பின்னர் காஷ்மீர் பண்டிட்டுகள் பலரும் ட்ரான்சிட் முகாம்களில் தான் வசிக்கின்றனர். இந்நிலையில் நேற்றைய சம்பவத்துக்குப் பின்னர் சாலைகளில் திரண்ட மக்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பின.
ராகுல் பட்டின் தந்தை பிட்டா பட் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி. ஒரு நபரை அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து சுட்டுக்கொல்ல முடிகிறது என்றால் இது அப்பட்டமான அரசாங்கத் தோல்வியன்று வேறொன்றும் இல்லை. எங்களுக்கு (காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு) இன்னுமே இங்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையில், இந்த படுகொலையை லஷ்கர் இ தொய்பா தீவிரவாஹிகள் செய்ததாக போலீஸ் ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார். லதீஃப் அகமது, அகீப் ஷேர் கோஜ்ரி ஆகிய இரண்டு பேரை முதன்மைக் குற்றவாளிகளாக சந்தேகிக்கிறோம். அவர்களைத் தேடி வருகிறோம் என்றார்.
குரல் கொடுத்த தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம்.. அண்மையில், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இப்படம், 80-களின் பிற்பகுதியிலும் 90-களின் முற்பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு வெளியானது.
காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடியே நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அண்மைக்காலமாகவே காஷ்மீரில் பண்டிட்டுகள் படுகொலை அதிகரித்து வருகிறது. இதனைக் கண்டித்து நேற்றிரவு போராடிய பண்டிட் சமூகத்தினர் மத்திய அரசு இவ்விவகாரத்தில் தங்களைக் கைவிட்டுவிட்டதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.