எஸ். இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்
‘நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே’ என்ற இனிமையான திரைப்படப் பாடல் நினைவிருக்கிறதா?
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உன்னத நடிப்பில் பிரபல இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பாவின் இன்னிசையில் 1960ல் வெளிவந்த ‘குறவஞ்சி’ என்ற திரைப்படத்தில் வரும் பாடல் இது. மேகலா பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இப் படத்தின் தயாரிப்பாளர்கள் – திமுக தலைவர் மு கருணாநிதி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன். பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் கணீர் மற்றும் இனிமையான குரலில் ஒலிக்கும் இந்த திரைப்படப் பாடலை எழுதியவர் கும்பகோணம் ராமசாமி கிருஷ்ணமூர்த்தி.
‘கு.ரா.கி’ என திரைப்படத்துறையினரால் அன்புடன் சுருக்கி அழைக்கப்பட்ட கவிஞர் கிருஷ்ணமூர்த்தி அறுபதுகளில் தஞ்சை இராமையாதாஸ், கண்ணதாசன் போன்றவர்களுக்கு இணையாக தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய பாடலாசிரியர். அன்றைய காலகட்டத்தில் மிகவும் ‘பிஸி’யான பாடலாசிரியர். மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இவர் பாடல்கள் எழுதியுள்ளார்.
தஞ்சை இராமையாதாஸ், கண்ணதாசன் போன்ற முன்னணிக் கவிஞர்கள் இருந்த காலகட்டத்திலேயே, மக்கள் திலகம் எம்ஜிஆர்-ன் முத்தான நடிப்பில் 1952ல் வெளியான ‘அந்தமான் கைதி’ திரைப்படத்தில் வரும் ஏழு பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கு.ரா.கி என்ற உண்மையே அவர் அந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு புகழ்பெற்ற கவிஞராக இருந்தார் என்பதை நம்மால் உணரமுடியும்.
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் உச்சகட்ட நடிப்பில் 1954ல் வெளியான ‘ரத்தக் கண்ணீர்’ திரைப்படத்தில் பிரபல பின்னணிப் பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் கணீர் குரலில் ஒலிக்கும் ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது’ என்ற பாடல், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் 1957ல் வெளியான ‘ராஜராஜன’; திரைப்படத்தில் வரும் ‘நிலவோடு வான் முகில் விளையாடுதே’ என்ற பாடல், அதே ஆண்டு வெளியான ‘சக்கரவரத்தி திருமகள்’ என்ற திரைப்படத்தில் வரும் பி லீலா பாடிய ‘எண்ணம் எல்லாம் இன்ப கதை பேசுதே’, 1961ல் வெளியான ‘திருடாதே’ படத்தில் வரும் ‘அழகான சின்னப் பொண்ணு போகுது’ மற்றும் ‘அந்தி சாயும் நேரத்திலே’, இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். நடிப்பில் 1960ல் வெளியான ‘தங்க ரத்தினம்’ படத்தில் பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் இனிமையான குரலில் ஒலிக்கும் ‘சந்தன பொதிகையின் தென்றலெனும் பெண்ணாள்’ ஆகிய பாடல்கள் இவர் எழுதியதே.
தனது பள்ளிப்பருவத்தில் மண்டையில் படிப்பு ஏறாததால் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு சென்னைக்கு ஓடிய கவிஞர் கு.ரா.கி அங்கே பல நாட்கள் பட்டினியாக இருந்து பின்னர் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து பலவித சிரமங்களைக் கடந்து வாழ்க்கையை நகர்த்தி ஒரு காலக்கட்டத்தில் முன்னணி திரைப்பட பாடலாசிரியராக உருவெடுத்தார்.
திரைப்படத்துறையினரால் மிகவும் விரும்பி தேடப்பட்ட பாடலாசிரியராக அவர் இருந்தார். பணம், புகழ் மற்றும் செல்வாக்கு கூடியது. புகழின் உச்சியில் இருந்தபோது இவையெல்லாமே இனி வாழ்க்கையில் நிரந்தரம் என்ற மிதப்பில் செல்வத்தை சேர்த்து வைக்காமல் தனது வருவாய் முழுவதையும் மது, மாது போன்ற கேளிக்கைகளில் செலவழித்தார்.
திரைப்படங்களில் பாடல் எழுதும் வாய்ப்புகள் குறைந்து ஒரு காலகட்டத்தில் மீண்டும் சாப்பாட்டுக்கே வழியின்றி பல நாட்கள் பட்டினியாக இருந்தபோதுதான் தனது சொந்த ஊருக்கு போகவேண்டும் என்ற ‘ஞானோதயம்’ அவருக்கு ஏற்பட்டது.
கிட்டத்தட்ட எழுபது வயதில் உடல் மெலிந்து, இரத்தம் சுண்டி, கண் பார்வை குறைந்து நரைத்த தலையுடன் வறுமையும் முதுமையும் இணைந்து வாட்ட, நடைபிணமாக கவிஞர் கு.ரா.கி 2007-ம் ஆண்டு கும்பகோணம் திரும்பினார். ஆனால், அவரை யாருக்குமே தெரியவில்லை. அதற்கு காரணம், இந்த காலக்கட்டத்தில் அவரது பெற்றோர், சகோதர-சகோதரிகள், சிறுவயது நண்பர்கள், தூரத்து உறவினர்கள் என அவருக்கு தெரிந்த எவருமே தற்போது உயிருடன் இல்லை.
வயதான காலகட்டத்தில் அவரை தங்கவைத்து பராமரிக்க சொந்த பந்தங்கள் யாருமின்றி அநாதையான கு.ரா.கி வேறு வழியின்றி கும்பகோணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தனது இறுதி காலத்தை கழித்து அடுத்த ஒருசில ஆண்டுகளிலேயே (2011 ம் ஆண்டு) இறந்தார்.
என்றுமே நிலைத்திருக்கும் என நினைத்திருந்த இளமை, செல்வம் ஆகிய அனைத்தையும் இழந்து முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தபோதுதான் ‘நாம் இந்த உலகை விட்டுச் செல்லும்போது பிறருக்கு உபயோகமாக ஏதாவது செய்துவிட்டு செல்ல வேண்டும்’ என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து தனது உடலை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக எழுதிக்கொடுத்துவிட்டு அவர் இறந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நடிகர் கமல்ஹாசன் தான் இறந்த பிறகு தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களின் ஆராய்ச்சிக்கு தானமாக தருவதாக விருப்பம் தெரிவித்து கையெழுத்திட்டதுடன் தனது ரசிகர்களையும் இதுபோன்று உடல் மற்றும் உறுப்புகளை தானம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அதைத் தொடர்ந்து, கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி உலகமெங்கும் உள்ள இளைஞர்கள் ‘காதலர் தின’த்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது தஞ்சாவூரில் ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி) அலுவலகத்தில் பணிபுரிந்துவந்த அவரது ரசிகர்கள் மூன்று பேர் தங்களது உடலை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க விருப்பம் தெரிவித்து கையெழுத்திட்ட படிவத்தை கொடுத்தனர்.
இதுபற்றி கூறிய தஞ்சை மருத்துவக் கல்லூரி ‘அனாடமி டிபார்ட்மென்ட்’ பேராசிரியை, “மனித உடலுறுப்புகளில் கண், கார்னியா, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், குடல், தோல், எலும்பு மஜ்ஜை போன்றவற்றை தானம் செய்யலாம். ஒருவர் உறுப்பு தானம் செய்வதன் மூலம் எட்டு உயிர்கள் பயன்பெற முடியும். ஊடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு கிடையாது” என்றார்.
கண் தானம் மற்றும் உறுப்புகள் தானம் செய்வதன் மூலம் இறப்புக்குப் பிறகும் வாழலாம். உடல் தானம் மற்றும் உறுப்பு தானம் செய்வது பற்றி பொதுமக்களிடம் போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை. விருப்பம் தெரிவித்து பதிவு செய்தவர்களில் சுமார் 5 சதவீதம் பேர்தான் அந்த உறுதிமொழியை நிறைவேற்றுகின்றனர். அதற்கு காரணம், சம்பந்தப்பட்ட நபர் இறந்தவுடன் அவரது குடும்பத்தினர் மத நம்பிக்கை மற்றும் அறியாமை காரணமாக உறுதிமொழியை நிறைவேற்ற முடியாமல் தடுத்துவிடுகின்றனர் என்றார் அந்த பேராசிரியை.
கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து இதுவரை 426 பேர் தங்களது உடலை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்வதாக விருப்பம் தெரிவித்து அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர். 2022-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதிவரை பாடலாசிரியர் கு.ரா.கி உள்பட 56 பேர் மட்டுமே தங்களது உடலை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானமாக கொடுத்துள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவெனில், உடலுறுப்பு தானம் செய்வதன் முக்கியத்துவத்தை நன்கு அறிந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் (நர்ஸ்கள்) குறிப்பிடத்தக்க அளவில் தங்களது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்ய இதுவரை விருப்பம் தெரிவித்து அதற்குரிய படிவத்தில் கையெழுத்திட்டிருக்கவில்லை. தஞ்சாவூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான். ஊருக்குதான் உபதேசமோ?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“