டெல்லி: எல்.ஐ.சி. பங்குகளை விண்ணப்பித்தவர்களுக்கு பங்கு ஒன்று ரூ.949 என்ற விலையில் அந்நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது. எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு தலா ரூ.60ம், ஊழியர்களுக்கு தலா ரூ.45ம் தள்ளுபடி விலையில் பங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பங்கு ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.902ம், அதிகபட்ச விலையாக ரூ.949ம் எல்.ஐ.சி. நிர்ணயித்திருந்தது. 22.13 கோடி பங்குகளை எல்.ஐ.சி. விற்பனைக்கு விட்ட நிலையில் அதைபோல் 3 மடங்கு விண்ணப்பங்களால் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்திய ஆயுள்காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் இந்திய பங்குச் சந்தைகளில் மே 17ம் தேதி பட்டியலிடப்பட உள்ளன. பொதுமக்கள், பாலிசிதாரர்கள், சொந்த ஊழியர்கள், நிறுவன முதலீட்டாளர்களுக்கு மொத்தம் 22.13 கோடி பங்குகளை சந்தைகளில் பட்டியலிடப்பட்டதும் முதலீட்டாளர்கள் வாங்கும் வகையில் எல்.ஐ.சி. பங்குகளின் விற்பனை சந்தையில் தொடங்கும். எல்.ஐ.சி.யின் 22.13 கோடி பங்குகளை விற்றதன் வாயிலாக ஒன்றிய அரசுக்கு ரூ.22,557 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பங்கு வெளியீட்டின் மூலம் இந்திய நிறுவனம் ஒன்று திரட்டியுள்ள அதிகபட்ச தொகை ரூ.20557 கோடி ஆகும்.