புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் மறைந்தைத் தொடர்ந்து சனிக்கிழமை இந்தியாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் வெள்ளிக்கிழமை தகவல் அனுப்பியுள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் வெள்ளிக்கிழமை காலமானார். மறைந்த அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், சனிக்கிழமை நாடுமுழுவதும் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. துக்க தினத்தில் நாடுமுழுவதும் தேசிய கொடி அறைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் மறைவிற்கு பிரதமர் மோடி, மூத்த அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியா- ஐக்கிய அரபு அமீரகத்தின் நல்லுறவை வளர்த்த தொலைநோக்கு பார்வை கொண்ட சிறந்த அரசியல்வாதியின் மறைவு தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ” ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவான வளர்ச்சியைக் கொண்டு வந்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக அவர் என்றும் நினைவு கூறப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த ஷேக் கலீஃபா வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 73. கடந்த 2004 நவம்பர் 3 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் இருந்து வந்தார்.