தலைநகர் சென்னையிலிருந்து கடைக்கோடியில் இருக்கும் கன்னியாகுமரிக்கு ஒரு மணி நேரத்தில் செல்ல முடியுமா ? எதிர்காலத்தில் இதற்கான வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் சென்னை ஐஐடி மாணவர்கள்.
வெற்றிடக் குழாயில் காந்தப் புல விசையின் மூலம் கலன்களை நகர்த்திச் செல்லும் புதிய தொழில்நுட்பம் “ஹைபர்லூப்” என அழைக்கப்படுகிறது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிலேயே ஆராய்ச்சியில் இருக்கும் இந்தத் தொழில்நுட்பத்தில் சென்னை ஐஐடி மாணவர்கள் 2019 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.
ஹைபர்லூப் தொழில்நுட்பத்தில் வெற்றிடக் குழாயில், கலன்கள் அதிவேகமாக பயணிக்கின்றன. இத்தொழில்நுட்பத்தில், சிறப்பியல்பு வாய்ந்த வெற்றிடக் குழாய் மற்றும் கலன்களை சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். ஆய்வுக்காக உருவாக்கப்பட்ட மாதிரியில் வெற்றிடக்குழாயில் கலன்கள் மணிக்கு 25 கிலோ மீட்டர் வரை பயணிக்கிறது. அடுத்தடுத்த முயற்சியில் 1000 கி.மீ. தொலைவை விரைவில் கடக்க இயலும் என ஐஐடி மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்விற்காக எலான் மஸ்க் வைத்த போட்டிக்கு சென்னை ஐஐடி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். ஐஐடி மாணவர்களுக்கு எல் & டி நிதி உதவி அறிவித்துள்ளதையடுத்து அடுத்த கட்டத்திற்கு இந்த ஆராய்ச்சி முன்னெடுக்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM