சான் ஜுவான்,
அகதிகள் தஞ்சம்
கரீபியன் தீவுநாடுகளான ஹைதி மற்றும் டொமினிகன் குடியரசில் ஒருபுறம் வன் முறையும், மறுபுறம் வறுமையும் தலைவிரித்தாடி வருகிறது. இதனால் அந்த இரு நாடுகளையும் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமான முறையில் கரீபியன் கடலில் படகுகளில் பயணம் செய்து அமெரிக்காவை அடைகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்துவிடுகிறது.
கடலில் கவிழ்ந்தது
இந்த நிலையில் ஹைதி நாட்டை சேர்ந்த பலர் படகு ஒன்றில் கரீபியன் கடல் வழியாக அமெரிக்கா நோக்கி புறப்பட்டனர். இவர்களின் படகு கரீபியன் தீவான போர்ட்டோ ரிகோ அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.
இதனிடையே போர்ட்டோ ரிகோ தீவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஹெலிகாப்டர் ஒன்று கடலில் படகு கவிழ்ந்து கிடப்பதை கண்டது.
11 பேர் பரிதாப சாவு
அதை தொடர்ந்து, இது குறித்து அமெரிக்க கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கடலோர காவல்படையினர் மீட்பு படகுகளில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் பெண்கள், சிறுவர்கள் உள்பட 11 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயம் நீரில் தத்தளித்தப்படி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 31 பேரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
பலர் மாயம்
அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனிடையே படகில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது உறுதி செய்யப்படாத நிலையில், இந்த விபத்தில் மேலும் பலர் மாயமாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.