பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் எஸ்.சி. எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர்கள் அதிகளவில் கிறிஸ்துவ மதத்துக்கு மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வரும் முயற்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை இறங்கினார்.
இதற்கு கிறிஸ்துவ, முஸ்லிம் அமைப்புகள் மட்டுமல்லாமல் காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத சட்ட மேலவையில் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. இதுகுறித்து கர்நாடக சட்ட அமைச்சர் மாதுசாமி நேற்று கூறியதாவது:
மதமாற்ற தடை சட்ட மசோதா கடந்த டிசம்பர் 23-ம் தேதி சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக, நாங்கள் இந்த மசோதாவை சட்ட மேலவையில் தாக்கல் செய்யவில்லை. அமைச்சரவையில் விவாதித்து அவசர சட்டமாக கொண்டு வர ஒப்புதல் பெற்றுள்ளோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 213வது பிரிவின்படி, சட்டப் பேரவை கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில் ஆளுநர் தேவை கருதி அவசரச் சட்டத்தை அனுமதிக்க முடியும். எனவே இதுகுறித்து அரசு அரசாணையை வெளியிட தீர்மானித்துள்ளது. இந்த அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டதால் அடுத்த 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை மற்றும் மேலவையில் ஒப்புதல் முடிவெடுத்துள்ளோம்” என்றார்.
இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார், “மதமாற்ற தடை சட்ட விவகாரத்தில் கர்நாடக அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது? இதனால் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்குமா? சிறுபான்மையினரின் உரிமையை பறிக்கும் இந்த சட்டத்தை காங்கிரஸ் அவைக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கும்” என்றார்.