கிளியும் அந்த மாமனிதரும்..
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
அது ஒரு பரபரப்பான திங்கட்கிழமை காலை.. காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு செல்ல ஏராளமானோர் அடித்துப்பிடித்து பேருந்துக்குள் ஏறினார்கள்.
பயணிகளின் அவசரத்தை புரிந்து கொண்டு பேருந்து ஓட்டுனர் மிக வேகமாக இயக்கினார். பாதி தூரம் சென்றதும் திடீரென பேருந்தை நிறுத்தி விட்டு, எதிரே வந்த பேருந்தை மடக்கி அதில் ஏறி ஓட்டுனர் போய்விட்டார்.
பயணிகள் அனைவரும் தத்தளித்தனர் அப்போது கண்டக்டர் சொன்னார், இதோ கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார் என்று. ஒன்றரை மணி நேரம் கழித்து வேறு ஒரு பேருந்தில் வந்து இறங்கினார் ஓட்டுநர்.
ஆவேசத்தில் இருந்த பயணிகள் கண்ட கண்ட வார்த்தைகளால் அவரை திட்டி இது நியாயமா என்று கேட்டனர்.
அவர் கொஞ்சம் கூட அசராமல், “ஒன்றுமில்லை கிளிக்கு தீனி வைக்க மறந்துவிட்டேன். அது பட்டினியால் கத்திக்கொண்டே இருக்கும். அதனால் தான் தீனி வைத்து விட்டு வருகிறேன்” என்று சொன்னார்.
என்ன ஆச்சரியம் எந்த பயணிக்கும் அதன் பிறகு கோபமே வரவில்லை.. பறவையின் பசிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நீ மனிதனல்ல தெய்வம் என்று ஓட்டுநரை வாழ்த்தினார்கள்.
அத்துடன் காலதாமதமாகி விட்டதால் பயணிகள் அவரவர் அலுவலகங்களுக்கு போன் செய்து லீவ் சொல்லிவிட்டு சாலையின் எதிரே போய் நின்று காஞ்சிபுரம் நோக்கி வந்த பேருந்தில் ஏறி போய்விட்டார்கள்.
கிளிக்கு தீனி வைத்த அந்த ஓட்டுனர் அதன்பின்னர் பயணிகள் யாரும் இல்லாததால் சென்னைக்கு பேருந்தை காலியாகவே இயக்கி சென்றார்.
இந்த உலகம்தான், எவ்வளவு பெரிய மனிதர்களையெல்லாம் தன்னுள் வைத்திருக்கிறது..!!!
நாம் எழுதும், “பசியோடு பச்சைக்கிளி” என்ற நூலிலிருந்து…