புதுடெல்லி: குஜராத்தில் நேற்று நடந்த அரசு திட்ட பயனாளிகளிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியில், மாணவி ஒருவரின் விருப்பத்தைக் கேட்டு, பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு ஒரு சில நிமிடங்கள் மவுனமானார்.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்தில், பரூச் நகரில் விதவைகள், முதியோர்கள் மற்றும் கைவிடப்பட்டவர்களுக்கான மாநில அரசின் 4 முக்கிய நிதியுதவி திட்டங்கள் மாவட்ட நிர்வாகத்தால் 100 சதவீதம் நிறைவு செயயப்பட்டுள்ளன. இதை கொண்டாடும் வகையில் நேற்று நடத்தப்பட்ட முன்னேற்ற பெருவிழா (உத்கர்ஷ் சமோரா) என்ற நிகழ்ச்சியில், பயனாளிகளிடம், பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.
அப்போது அயுப் பட்டேல் என்ற பார்வையற்ற பயனாளி கூறுகையில், தனது 3 மகள்களும் பள்ளியில் படிப்பதாகவும், பிளஸ் 2 படிக்கும் மூத்த மகள் மருத்துவராக விரும்புவதாகவும் தெரிவித்தார்.
உடனே பிரதமர் மோடி, அவரது மூத்த மகளிடமே, நீ மருத்துவராக விரும்புவதற்கு காரணம் என்ன? என கேட்டார்.
தனது தந்தையின் பார்வை குறைபாட்டை போக்கவே நான் மருத்துவராக விரும்புகிறேன் என அவர் பதில் அளித்தார்.
இதைகேட்டு உணர்ச்சி வசப்பட்ட பிரதமர் ஒரு சில விநாடிகள் மவுனமானார்.
பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய பிரதமர், “உனது இரக்ககுணம்தான் உனது பலம்” என அந்த மாணவியிடம் கூறினார்.
பிரதமரிடம் பேசிய மாணவியின் தந்தை, தான் சவுதி அரேபியாவில் பணியாற்றியபோது, கண்ணீல் ஊற்றிய சொட்டு மருந்து காரணமாக பார்வை மங்கியதாக தெரிவித்தார். அவரிடம், நீங்கள் உங்கள் மகள்களின் கனவை நிறைவேற்ற வேண்டும். மருத்துவம் படிக்க உதவி தேவைப்பட்டால் உதவுவதாகவும் பிரதமர் கூறினார்.
சீர்திருத்தம் தேவை
கரோனா சவால்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், வலுவான உலகளாவிய சுகாதார கட்டமைப்பை உருவாக்கவும் சர்வதேச அளவில் 2-வது உச்சிமாநாடு நேற்று நடைபெற்றது. இதில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
கரோனா தொற்று மனித வாழ்க்கைக்கு தொடர்ந்து இடையூறு செய்கிறது. இந்தியாவில் கரோனா தொற்றை சமாளிக்க மக்களை மையமாக கொண்ட வியூகங்களை நாங்கள் பின்பற்றினோம். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பாரம்பரிய மருந்துகளை பயன்படுத்தினோம். இந்தியாவில் பாரம்பரிய மருத்துவத்தின் உலக சுகாதார மையத்துக்கு கடந்த மாதம் அடிக்கல் நாட்டினோம். இதன் மூலம் பாரம்பரிய மருந்துகளை உலகம் அறியும்.சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் முன்னேற்ற, உலக சுகதார நிறுவனம் சீர்திருத்தப்பட வேண்டும், வலுப்படுத்தப்பட வேண்டும். இந்த முயற்சியில் முக்கிய பங்காற்ற இந்தியா தயார்.
செவிலியர்களுக்கு வாழ்த்து
சர்வதேச செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி நேற்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பும் கருணையும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது.
சர்வதேச செவிலியர் தினமானது, அனைத்து செவிலியர் பணியாளர்களுக்கும் நமது பாராட்டுக்களை மீண்டும் வலியுறுத்தும் நாள். மிகவும் சவாலான சூழ்நிலையிலும்கூட சிறப்பான பணிக்காக அனைத்து செவிலியர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடிகூறியுள்ளார்.