குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது; பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு புதிய மனு தாக்கல்.!

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது. பேரறிவாளனை விடுவிக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு உச்சநீதிமன்றத்தால் தண்டனை குறைப்பு செய்யப்பட்டுவிட்டது. பேரறிவாளனை விடுதலை செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அமைச்சரவை முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பியது அரசியல் சாசனத்துக்கு முரணானது என்றும் ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர், தன்னிச்சையாக முடிவெடுக்கவோ, செயல்படவோ முடியாது. உச்ச நீதிமன்றம் தனக்கான தனிப்பட்ட அதிகாரமான 142-ஐ பயன்படுத்தி, முன்பு பல வழக்குகளில் முடிவெடுத்தது போல், இந்த விவகாரத்திலும் முடிவெடுக்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பு எழுத்துப்பூர்வ வாதத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.இதனைத்தொடர்ந்து, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவர் மட்டுமே முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என ஒன்றிய அரசு புதிய பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. முன்கூட்டியே விடுதலை கோரி பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஏற்கனவே பேரறிவாளன் தரப்பு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்த நிலையில் ஒன்றிய அரசும் வாதம் தாக்கல் செய்தது. மார்ச் 9ல் ஜாமீன் வழங்கப்பட்டதை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு வேறு நிவாரணம் வழங்கக்கூடாது என்றும் கூறியுள்ளது.மேலும், குற்றத்தின் தீவிர தன்மை, ஆதாரங்களை கவனத்தில் கொள்ளாமல் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது என்றும் குற்றசாட்டு வைக்கப்பட்டது. பேரறிவாளன் ஐபிசி 302-ன் கீழ் தண்டனை பெற்றாலும், இந்த வழக்கை விசாரித்தது ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்பு என்பதால், மாநில அரசு முடிவெடுக்க முடியாது என்றும் பேரறிவாளன் விவகாரத்தில் குடியரசு தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனவும் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.