குற்றப்பரம்பரை சம்பந்தமாக முன்பு பட உலகில் நிறைய பஞ்சாயத்துக்கள் நடந்தன. அந்தக் கதையைக் கையாள்வதில் இயக்குநர்கள் பாலா, பாரதிராஜா இருவருக்கும் கடும் கருத்து மோதல்களும், கடுமையான வார்த்தை பிரயோகங்களும் அரங்கேறியது. பின்னர் இருவருக்கும் வேண்டியவர்கள் சமாதானம் செய்து வைக்க, இருவரும் சமாதானம் ஆனார்கள். அதன்பின், அந்த பட கதையை படமாக்கும் முயற்சியில் இருந்து பரஸ்பரம் விலகிக் கொண்டார்கள். அப்புறம் கேட்பாரற்று அந்த ஸ்கிரிப்ட் அப்படியே கிடந்தது. புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் உள்ள சசிகுமார் இந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்க்க, இதிலிருந்த சீன்களின் வரிசைக் கிரமத்தையும், உணர்ச்சிகள் கண்டும் ஆச்சரியப்பட்டு போய்விட்டார். உடனே பாரதிராஜா, பாலா இருவரிடம் சம்மதம் பெற்று நானே டைரக்ட் செய்து கொள்கிறேன்.
பெரிய கதை என்பதால் ஒடிடியில் சுலபமாக தயாரித்து விடலாம் என்று முடிவு செய்தார். இதில் சசிகுமாரே டைரக்ட் செய்யவும் ஒப்புக் கொண்டு விட்டதால் ஒடிடியினர் மகிழ்ச்சி அடைந்து விட்டார்கள். வெகு நாளைக்குப் பிறகு சசிகுமார் இயக்குவதை மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பாலா, பாரதிராஜா சுலபமாக சம்மதித்து விட்டதால் படம் ஆரம்பிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லையாம்.
முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கையைப் படமாக்க முயற்சி நடக்கிறது. அதற்காக ஒரு டீம் நியமித்து வேலை நடக்கிறது. முழு ஸ்கிரிப்ட் தயாரித்து விட்டு மற்றவை பற்றி அடுத்து பார்க்கலாம் என்ற ஏற்பாட்டில் காரியங்கள் நடந்தேறுகின்றன. சின்ன வயது ஸ்டாலின் முதல் இப்போது இருக்கிற முதல்வர் வரை உருவ ஒற்றுமையில் மிகவும் சரியாக இருக்கிறவரை கண்டுபிடித்தும் விட்டார்கள். நான்கு இயக்குநர்கள் சேர்ந்து ஸ்கிரிப்ட் தயாராகி வருகிறது. மிகவும் முக்கியமான படமாக இருக்கவேண்டும் என்ற விதத்தில் அதிக அக்கறையோடு இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். திராவிட இயக்கப் பின்னணி அறிந்த ஒரு இயக்குநர் இதில் பின்புலமாக இருக்கிறார்.
அமெரிக்க தமிழ்ச் சங்கம் கொரோனா காலத்திற்கு பிறகு அதாவது இரண்டாண்டு காலத்திற்குப் பிறகு ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இதற்காக தமிழகத்திலிருந்து அரசியல், கலைத்துறை, சினிமா சார்ந்து குறிப்பிடத்தக்க சிலரை அழைக்கப்போகிறார்கள். ஜூன் அல்லது ஜூலையில் அந்த விழா நடக்க உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி சில அமைச்சர்கள், விஜய்சேதுபதி, நயன்தாரா, கதைசொல்லி பவா. செல்லத்துரை என 20 பேர் வரை இந்த விருந்தினர் வருகை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த வரிசையில் சேர எல்லாத் தரப்பிலிருந்தும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்தப் பட்டியல் இன்னும் சில தினங்களில் தெரியவரும் என்கிறார்கள்.
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘உருமி’க்கு பிறகு மீண்டும் டைரக்ஷன் பக்கம் வந்திருக்கிறார். மஞ்சுவாரியார், யோகிபாபு, காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் இப்படத்தின் பெயர் ‘சென்டிமீட்டர்’. கேமராவையும் சந்தோஷ் சிவனே கவனித்திருக்கிறார். ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என மூன்றுபேர் இசையமைத்திருக்கிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை சந்தோஷ்சிவன் விரும்பியதற்கினங்க மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.
திருமணம் முடிந்தாலும் தொடர்ந்து நடிப்பதில் உறுதியாக இருக்கிறார் நயன்தாரா. இது காதல் வயப்பட்டப்போதே விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சேர்ந்து எடுத்த முடிவாம். அதிகமாக இந்திப் படங்களில் நடிப்பதற்கும் நயன்தாரா ரெடி சொல்லிவிட்டாராம். இதற்கு நடுவில்தான் விக்னேஷ் சிவன், அஜித்தின் புது படத்தின் வேலைகளிலும் தீவிரம் காட்டுகிறார்.
டைரக்டர் பாலா அவரின் முன்னாள் மனைவி மலர் இருவரும் பிரிந்துவிட்டாலும் குழந்தையை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை. மகள் எப்போது வேண்டுமானாலும் இருவரையும் சென்று பார்த்துக்கொள்ளலாம் அதற்கு எந்தத் தடையும் இருவரிடமும் இல்லையாம். பொதுவாக அப்பாவை பார்க்க விடாமல் செய்வதும், ஒரு குறிப்பிட்ட நாள், நேரம் மட்டுமே இதற்கென ஒதுக்குவதும் பொதுவாக இந்த மாதிரி விவாகரத்துகளில் நடக்கும். படப்பிடிப்பு இல்லாமல் இருந்தால் மகள் பாலாவின் வசம் சந்தோஷமாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. தங்களின் பிரிவால் மகள் மனம் வீணாக பாதிக்கப்படுவதை இரண்டு பேருமே விரும்பவில்லையாம். இப்படியெல்லாம் இருக்கும் போது பிரிவு ஏன் என ஆதங்கப்படுகிறார்கள் பொது நண்பர்கள்.
சரிகா அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லாமல் அவதிப்படுவதாகவும் அதனால் வரவு செலவிற்குக்கூட பணம் இல்லாமல் நாடகங்களில் நடிப்பதாகவும் செய்திகள் வந்தன. விசாரித்ததில் அந்த செய்திகள் உண்மைதானாம். அவரின் இரண்டு குழந்தைகளும் அம்மாவை சென்னைக்கு அழைப்பதாகவும் அவர் இங்கே வர விருப்பமில்லை என சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள். தன் சொந்தக்காலில் நிற்கவே விரும்புவதால் மகள்கள் கொடுத்த பொருளாதார உதவியையும் நிராகரித்துவிட்டு மும்பையிலேயே இருக்கிறாராம். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மகள்கள் சரிகாவிடம் பேசி சென்னைக்கு அழைத்து வந்துவிட முடிவு செய்திருக்கிறார்கள்.