சுப. உதயகுமாரன்
[7] சும்மா இருப்போம்
‘சும்மா’ எனும் சொல்லுக்கு ஏராளமான அர்த்தங்கள் உள்ளன. அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் அதிகம் பயன்படுத்தும் சொற்களுள் இது முக்கியமானது. சும்மா இருப்பது எவ்வளவு கடினமானது என்பதை விளக்கும் வடிவேலு காமடி பிரச்சித்திப் பெற்றது. உண்மையில் நாம் அனைவரும் சும்மா இருக்க முடியாது எனும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
கைப்பேசி என்றொரு கருவி வந்ததிலிருந்து நாம் அருகிலிருப்பவரிடம் பேசுவதில்லை, அண்ணாந்து ஆகாயத்தைப் பார்ப்பதில்லை, இயற்கையை ரசிப்பதில்லை, யாரையும், எதையும் பொருட்படுத்துவதில்லை. ஏன், ஐந்து நிமிடம் கைப்பேசியை நோண்டாமல் நம்மால் ‘சும்மா’ இருக்க முடிவதில்லை.
வியட்னாம் நாட்டில் திக் நாட் கான் (Thich Nhat Hanh) என்றொரு சென் மதகுரு இருந்தார்; இந்த ஆண்டு சனவரி மாதம்தான் தன்னுடைய 95-வது வயதில் அவர் காலமானார். தன் வாழ்நாள் முழுக்க கருணை, இரக்கம், அகிம்சை, விழிப்புணர்வு பற்றியெல்லாம் மக்களுக்கு போதனைகள் செய்துவந்த அவர், நம்மை சும்மா இருக்கச் சொல்கிறார். “விழித்திருக்கும் நேரமெல்லாம் வேலை செய்து கொண்டிருக்க வேண்டும், எதையாவது சாதித்துக் கொண்டிருக்க வேண்டும், பணம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். சும்மா இருங்கள், சுகமாக வாழுங்கள்” எனும் பொருளில் அறிவுரைக்கிறார். இது ஓர் ஆழமான தத்துவார்த்த போதனை.
சும்மா இருப்பதன் ஒரு துருவம் மரணம். ஆனால் திக் நாட் கான் வாழ வழி சொல்கிறாரே தவிர, நம்மை சாகச் சொல்லவில்லை. சும்மா இருப்பதன் இன்னொரு துருவம் சோம்பல். சோம்பல் என்பது முயற்றின்மை, முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளாது வாளாவிருத்தல், நேரத்தை வீணாக்கல். வலிமைமிக்க இரும்பே இயக்கமின்றி இருந்தால். துருப்பிடித்துப் போவதுபோல, முயற்சியற்ற மனிதர்கள் முடங்கிப் போவார்கள் என்பதை கவிமணி அழகாக விவரிக்கிறார்.
வேலைசெய் யாதுசோம் பேறிகளாய்—நிதம்V வீட்டி லிருப்பது ஆகா தம்மா! மூலையி லிட்ட இரும்பு துருவேறி, மோசமாய்ப் போவதும் கண்டிலையோ?
நிற்பதற்கு நேரமின்றி சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றைப் பற்றி பாடுகிற கவிமணி இப்படிச் சொல்கிறார்:
அல்லும் பகலும் அலைந்துவந்தேன்—எங்கள் ஆழி இறைவனைக் காணவந்தேன்; நில்லும் எனக்கினி நேரமில்லை—இன்னும் நீண்ட வழிபோக வேண்டும் அம்மா!
சாவு—சோம்பல் எனும் இரு துருவ நிலைகளுமே ஏற்புடையவை அல்ல. திக் நாட் கான் சொல்லும் சேதி, “செத்துப் போ, சவம் போல இயங்காதிரு” என்பதல்ல. “வேலைவெட்டிக்குப் போகாமல், வீணனாய் சோம்பிக்கிட, சுறுசுறுப்பாய் இயங்காதே” என்பதுமல்ல. கடந்தகாலத்தைப் பற்றி கவலைப்படாமல், வருங்காலத்தைப் பற்றி பதற்றமடையாமல், நிகழ்காலத்தில் நிலைத்திரு என்பதுதான் அவர் சொல்லும் அறிவுரை. உன் செயலில் செயலற்றத்தன்மையையும், செயலற்றிருத்தலில் செயலையும் உருவாக்கப் பழகு என்கிறார்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
நான் ஒருமுறை ஒரு யோகா ஆசிரியரிடம் என்னுடயை பிரச்சினை குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு பதிவு அஞ்சலை அவசரமாக அனுப்புவதற்காக கடைசி நேரத்தில் ஆட்டோவில் அஞ்சலகம் நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். மூச்சைப் பிடித்துக்கொண்டு பதற்றம் மிகுந்தவனாக இருக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்தேன். அந்த தருணத்தை நான் கையாண்ட விதம் சரியா, தவறா என்று அவரிடம் கேட்டேன்.
நான் பேசியதை பொறுமையாகச் செவிமடுத்த அவர், மிகவும் நிதானமான குரலில் கேட்டார்:
“நீங்கள் பரபரப்பாக, பதற்றமாக இருந்ததால், ஆட்டோவின் வேகத்தைக் கூட்டவோ, குறைக்கவோ முடிந்ததா?”
“இல்லை.”
“நீங்கள் பரபரப்பாக, பதற்றமாக இருந்ததால், போக்குவரத்து நெரிசலைக் கூட்டவோ, குறைக்கவோ முடிந்ததா?”
“இல்லை.”
“நீங்கள் பரபரப்பாக, பதற்றமாக இருந்ததால், அஞ்சலக நேரத்தைக் கூட்டவோ, குறைக்கவோ முடிந்ததா?”
“இல்லை.”
“பிறகேன் தேவையே இல்லாமல் துன்புற்றீர்கள்? அமைதியாக அமர்ந்திருந்து அந்தப் பயணத்தை அனுபவித்திருக்க வேண்டியதுதானே?”
சும்மா இருக்க முடியாத, நவீன வாழ்வினால் மேலெழுந்த பதற்றம் அது.
அமெரிக்காவிலுள்ள ஹவாய் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மாணவனாக நான் இருந்தபோது, தினமும் மதியஉணவை ஒரு மரத்துக்குக் கீழ் அமர்ந்து உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடித்தேன். அந்த மரத்தோடுப் பேசி, அங்கே வரும் பறவைகளுக்கு உணவளித்து, புல்பொதிந்த மண்ணில் படுத்து சற்றே கண்ணயர்வது ஓர் அற்புதமான அனுபவமாக இருந்தது. நேரத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த. நேரநோய் (Time disease) பிடித்த எனக்கு, அது ஓர் ஆயாசத்தை அளித்தது.
நேர மேலாண்மை குறித்த பயிற்சி ஒன்றை நடத்திக்கொண்டிருந்த ஓர் ஆசிரியர், மேசையின் மீதிருந்த ஒரு கண்ணாடிக் குவளையில் பெரிய கற்கள் சிலவற்றைப் போட்டு நிரப்பிவிட்டு, அந்தக் குவளை நிரம்பிவிட்டதா என்று கேட்டார். மாணவர்கள், “ஆமாம் நிரம்பிவிட்டது” என்று சொன்னார்கள்.
அடுத்ததாக ஆசிரியர் கொஞ்சம் சல்லிக் கற்களை உள்ளேப் போட்டுவிட்டு, “இந்தக் குவளை இப்போது முழுவதுமாக நிரம்பிவிட்டதா?” என்று கேட்டார். இனி என்ன வித்தைக் காட்டப்போகிறாரோ என்கிற ஆர்வம் மேலெழுந்தாலும், பல மாணவர்கள் குவளை உண்மையிலேயே நிரம்பிவிட்டதாகவே நம்பினர்.
அடுத்து ஆசிரியர் கொஞ்சம் மணலை அள்ளி உள்ளேப் போட்டார். “இப்போது குவளை நிரம்பிவிட்டதா?” என்று கேட்டார். அனைவரும் ஒரே குரலில் “ஆமாம், குவளை முழுவதுமாக நிரம்பிவிட்டது” என்றனர்.
“இல்லை” என்று சொன்ன ஆசிரியர், குவளையில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றினார். குவளை அதையும் ஏற்றுக்கொண்டது.
“இதிலிருந்து உங்களுக்கு என்னப் புரிகிறது?” என்று கேட்டார் ஆசிரியர். ஒரு மாணவர், “ஒரு நாளில் இவ்வளவுதான் வேலை செய்ய முடியும் என்றெல்லாம் கிடையாது, இன்னும் இன்னும் வேலை செய்துகொண்டே இருக்கலாம்” என்றார். இன்னொரு மாணவரோ, “உங்களுக்கு எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், சிறிய விடயங்களுக்கும் நேரம் ஒதுக்க முடியும்” என்றார்.
ஆசிரியரோ நேர மேலாண்மையின் (Time Management) சூட்சுமம் பற்றியது அந்த பயிற்சி என்று தெரிவித்தார். உங்கள் நேரக் குவளையில் பெரிய கற்களை முதலில் போட்டுவிட்டு, சிறிய கற்களை, மணலை, தண்ணீரைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நேர் மாறாக, சிறிய கற்களை, மணலை, தண்ணீரை முதலில் நிரப்பிவிட்டால், குவளையில் பெரிய கற்களுக்கு இடமே இல்லாமலாகி, அது பெரும் தவறாகிப் போகும்.
உங்கள் வாழ்க்கையின் பெரிய கற்கள் எவையெவை என்பதை தெளிவாகத் தீர்மானித்து அவற்றை உங்கள் நேரக் குடுவைக்குள் முதலில் போடுங்கள். வாழ்வு, உழைப்பு, ஓய்வு — இவை மூன்றுக்கும் முறையே எட்டு மணி நேரத்தை ஒதுக்கிக்கொண்டு, நேர நெருக்கடிகளுக்கு இடமளிக்காது, “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்” என்று வழிவகுத்துக் கொள்ளுங்கள்.
நேரம் என்பது இயற்கை நமக்களித்திருக்கும் பெருங்கொடை. எந்தவிதமான பாரபட்சமுமின்றி அனைவருக்கும் சமமாக அளிக்கப்படும் அளவிட முடியாத செல்வம் அது. நேரத்தின் ஓட்டத்தை நீங்களோ, நானோ யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அதேபோல, செலவு செய்துவிட்ட நேரத்தை திரும்பப்பெறவும் இயலாது. பிறரது நேரத்தின் பயன்பாட்டை சேவையாகப் பெற்றுக்கொண்டு, அதற்குரிய சம்பளத்தைக் கொடுக்கலாமே தவிர, இன்னொருவரின் வாழ்விலிருந்து கொஞ்சம் நாட்களை, ஆண்டுகளை கடனாகவோ, இனாமாகவோ, விலைகொடுத்தோப் பெற முடியாது. நேரம் என்பது இயற்கை நமக்களிக்கும் ஒரு மாபெரும் சொத்து.
நாம் நூறு ஆண்டுகள் வாழப்போவதாகக் கொண்டாலும், வெறும் 36,500 நாட்கள்தான் இந்த மண்ணில் வாழ முடியும். அதற்குள் நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக அர்த்தத்துடன் வாழ்ந்து, பிறருக்கு நம்மால் முடிந்த நன்மைகள் பல செய்து, நம்முடைய வழித்தோன்றல்களுக்கு ஓர் அருமையான வழியமைத்துக் கொடுத்துவிட்டு விடைபெறுவதே பயனுள்ள வாழ்க்கையாக விளங்கும்.
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 1
உங்கள் அன்றாட வாழ்வில் நேரம் தவறாமையைக் கடைபிடியுங்கள். உங்கள் நேரத்தைப் போலவே பிறரின் நேரத்தையும் மதிப்புடையதாகக் கருதுவது பிறரின் அன்பையும், நட்பையும், மரியாதையையும் உங்களுக்குப் பெற்றுத் தரும். அவ்வப்போது ஒரு நேரத் தணிக்கை (Time Audit) செய்துகொள்ளுங்கள். உங்கள் நேரத்தை எப்படி செலவிடுகிறீர்கள், எதற்காவது நேரத்தை அதிகம் செலவிட வேண்டுமா, அல்லது குறைத்துச் செலவிட வேண்டுமா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். நேர விரயத்துக்கு இடம்கொடாமல் இனிதாய் வாழப் பழகிக்கொள்ளுங்கள். அதேநேரம், நேரம் நேரம் என்று நேரத்துக்குப் பின்னால் ஓடி, நேர நோய்க்கும் (Time Disease) ஆளாகிவிடாதீர்கள்.
உயிரோடு இருக்கும் நேரமெல்லாம் ஏதாவது செய்தாக வேண்டும், பணம், பதவி, புகழுக்குப் பின்னால் ஓடவேண்டும் என்றெல்லாம் தவறாக கணக்குப் போடாதீர்கள். அவ்வப்போது கடற்கரை, வயல்வெளி, மலைமுகடு, மரத்தடி போன்ற உங்களுக்குப் பிடித்தமான ஓரிடத்திற்கு சென்று அமைதியாக, எதுவுமே செய்யாமல் சும்மா உட்கார்ந்திருங்கள். சோம்பிக் கிடப்பதும், சும்மா இருப்பதும் வெவ்வேறானவை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். சும்மா இருப்பது நேர விரயமல்ல; மாறாக, உங்கள் உயிருக்கு ‘சார்ஜ்’ ஏற்றும் அற்புதத் தருணம்.
(கட்டுரையாளர் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்புக்கு: [email protected]).
இதையும் படியுங்கள்: சுப. உதயகுமாரன் எழுதும் ‘தன்னைத்தான் காக்கின்’- பகுதி 6