சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எவ்வித தொழிற்சாலையையும் இந்த அரசு அனுமதிக்காது என்று, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு சட்டம்இயற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
இதில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலர் இறையன்பு, பல்வேறு துறைகளின் செயலர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
காவிரி டெல்டா என்பது மிகவும்செழிப்பான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் முழு பகுதியையும், கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி மாவட்டங்களில் ஒருசில பகுதிகளையும் உள்ளடக்கியது.
வேளாண்மை, உணவு உற்பத்தி பகுதியாக டெல்டா மாவட்டங்கள் இருந்தாலும், மற்றொரு பக்கம் பல்வேறு நெருக்கடிகள் மிகுந்த பகுதியாகவும் உள்ளது. இப்பகுதிகளில் வெள்ளம், புயல் போன்றஇயற்கைச் சீற்றங்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இப்பகுதி விவசாயிகள் நலனுக்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமும், அதற்கானஅதிகார அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த அரசு இதற்கானசட்டத்தை மட்டும் இயற்றிவிட்டு, அதை செயல்பாட்டுக்கு கொண்டுவர எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுக்கவில்லை. முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டமாக இருந்தாலும், விவசாயிகளின் நலனை பாதுகாக்க வாய்ப்பு அளிப்பதால், இச்சட்டத்தின் கூறுகளை செயல்பாட்டுக்கு கொண்டுவர இந்த அரசு உறுதியாக உள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் பணிகளுக்கு பாதிப்புஏற்படுத்தக்கூடிய எவ்வித தொழிற்சாலையையும் இந்த அரசு அனுமதிக்காது. விவசாயிகள், விவசாயத் தொழிலின் நலனை பாதுகாக்கவும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த அரசு முனைப்புடன் செயல்படும்.
பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் நீர்ஆதாரங்களை வலுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் துணை நிற்க வேண்டும். விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்படும் புதிய பயிர்வகைகள், புதிய மாற்றுத் தொழில்நுட்பங்களை உடனுக்குடன் நடைமுறைப்படுத்தி நல்ல விளைச்சல் பெற வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டத்தில் உள்ள அனைத்து பிரிவுகளும் செயல்பாட்டுக்கு வரும் வகையில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் நல்ல முறையில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்து, காவிரி டெல்டா பகுதிக்கு நீண்டகால திட்டம் வகுக்க, உங்கள் கருத்துகள், ஆலோசனைகள், உயரிய பங்களிப்பை வழங்க வேண்டும். வேளாண்மையில் முக்கிய அங்கம் வகிக்கும் டெல்டா மாவட்டங்களை கண்ணும் கருத்துமாக காக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சேரன் கூறும்போது, ‘‘ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும், சில பழைய திட்டங்கள் தொடர்ந்து நடக்கின்றன. அவற்றையும் கைவிட வேண்டும். பழைய திட்டம் என்று கூறி குழாய் பதிப்பதை தடுக்க வேண்டும். இயற்கை விவசாயத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பழமையான மாடு இனங்களை மீட்க வேண்டும் என்றும்இக்கூட்டத்தில் தெரிவித்துள்ளோம். அடுத்த கூட்டம் 6 மாதங்களில் நடக்க வாய்ப்பு உள்ளது’’ என்றார்.