சென்னை: சர்வதேச செவிலியர் தினம் நேற்றுகொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்திகள் வருமாறு:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: மருத்துவத் துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியர் அனைவருக்கும் உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துகள். தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம். அவர்களது நியாயமான கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றும்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: மருத்துவர்களுக்கு பக்கபலமாகவும், நோயாளிகளுக்கு பக்கத் துணையாகவும், மருத்துவச் சேவையின் தூண்களாகவும் நின்று, கரோனா உச்சத்தில் இருந்த நிலையிலும் அச்சமின்றி சேவையாற்றிய வெள்ளுடை தியாகிகளுக்கு வணக்கத்தையும் வாழ்த்தையும் பகிர்ந்து கொள்வோம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: மருத்துவமனைகளில் நோயுற்று வரும் மக்களுக்கு அன்புடனும் பரிவுடனும் சேவையாற்றி வரும் செவிலியர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்: செவிலியர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். செவிலியர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையும் பணிச்சூழலையும் அமைத்து தருவதற்கான சட்டங்களை ஆட்சியாளர்கள் கொண்டு வரவேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பொதுநலத்தோடு மருத்துவ சேவையை செய்யும் செவிலியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்கள் வகுத்து, அவர்களின் வளமான வாழ்வுக்கு துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.