உதய்பூர்: பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரி அமைப்பின் தவறான கொள்கையால் நாடு எண்ணற்ற சவால்களை சந்தித்து வருகிறது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ என்ற 3 நாள் காங்கிரசின் சிந்தனை அமர்வு மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் நாட்டின் பன்முகத் தன்மைக்கும், ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பவர்கள் விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர். பிரதமர் மோடியும், அவரைச் சார்ந்தவர்களும் அதிகபட்ச ஆளுமை, குறைந்தபட்ச அரசு என்ற கோஷத்தை முன்வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார். நாட்டின் அனைத்து தரப்பினரிடையே வெறுப்பு பேச்சுக்களை பாஜக அரசு பரப்பி வருகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களிடையே அச்சத்தை பரப்பி வருகிறது என சாடினார். தொடர்ந்து பேசிய சோனியாகாந்தி, சாமான்ய மக்களிடையே அச்சத்தையும், பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்தி பிளவுபடுத்த பாஜக அரசு முயற்சி செய்கிறது என்றும் குற்றம்சாட்டினார். மெ 15ம் தேதி மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேரு உரையாற்ற உள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.