ஜேர்மன் பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் தீவிரவாதத் தாக்குதல் நடத்தலாம் என தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
ஜேர்மனியிலுள்ள Essen நகரில் வாழும் சம்பந்தப்பட்ட மாணவரை கைது செய்த பொலிசார், அவர் தன் பெற்றோருடன் வாழும் வீட்டை சோதனையிட்டார்கள்.
அப்போது அந்த வீட்டில் வெடிபொருட்கள், வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள், வில் அம்புகள், ஈட்டிகள் முதலான பல்வேறு ஆயுதங்கள் கிடைத்தன.
அந்த 16 வயது மாணவர் தற்போது படிக்கும் பள்ளி மற்றும் அவர் முன்பு படித்த பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு பொலிஸ் படையினர் சோதனை நடத்தியதில், அங்கு வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
நல்ல வேளையாக பெரும் சேதம் ஒன்றைத் தவிர்த்துவிட்டோம் என்று கூறியுள்ள North Rhine-Westphalia மாகாண துணை பிரீமியரான Joachim Stamp, நாஸி தீவிரவாத தாக்குதல் என சந்தேகிக்கப்படும் தாக்குதல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அந்த மாணவர் மீதான விசாரணை தொடரும் நிலையில், அவர் தனித்தே செயல்பட்டதாகவும், அவருக்கு அவசரமாக உதவி தேவைப்படும் அளவில் மன நல பிரச்சினைகள் இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.