புதுடெல்லி: வாரணாசி ஞானவாபி மசூதியில் களஆய்வு நடத்தும் கீழ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம் இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதையடுத்து அங்கு களஆய்வு மேற்கொண்டு மே 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மசூதிக்குள் படம்பிடிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட விவகாரம் குறித்து வாரணாசி நீதிமன்றம் நேற்று விசாரித்தது. நீதிபதிகள் உத்தரவில், “மனுதாரர்கள் கேட்டபடி மசூதியின் உள்பகுதி, அடித்தளம் உட்பட அனைத்து இடங்களிலும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். களஆய்வுப் பணி மே 17-ம் தேதிக்குள் முடிவடைய வேண்டும்” என்று தெரிவித்தனர்.
இந்தநிலையில் கியான்வாபி மசூதி வளாகத்தின் களஆய்வுக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி அஞ்சுமன் இன்டெஜாமியா மஜித் கமிட்டி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் தற்போதைய நிலையில் இருக்க உத்தரவிடக் கோரி இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் ஹுசெபா அஹமதி இந்த விஷயத்தை முன் வைத்தார்.
ஆனால் ஆவணங்களைப் பார்க்காததால், பிரச்சினை என்னவென்று தங்களுக்கு தெரியாது என்று கூறி இடைக்கால தடை விதிக்க பெஞ்ச் மறுத்துவிட்டது. இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில் ‘‘நாங்கள் ஆவணங்களை பார்க்கவில்லை. என்ன விஷயம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த விவரம் தெரியாமல் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். நான் எப்படி ஒரு ஆர்டரை அனுப்புவது. ஆவணங்களை படித்து பார்த்த பின்பு மட்டுமே உத்ரதவு பிறப்பிக்க முடியும். அதேசமயம் இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க தயார்’’ என்று கூறினர்.
முன்னதாக ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்டெஜாமியா மஜித் கமிட்டி சார்பில் ஆஜரான அஹமதி, ‘‘வாரணாசி சொத்துகள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ் உள்ளது. தற்போது ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும்’’ எனக் கூறினார்.