டெல்லி: மேற்கு டெல்லியான முண்டக் பகுதியின் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. மேலும் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலை அளவில் 4.40 மணி அளவில் ஏற்பட்தாக சொல்லப்படும் இந்த பயங்கர தீவிபத்தை சுமார் 24 தீயணைப்பு குழுவினர் போராடி அணைத்து வருகின்றனர். மூன்றடுக்கு கொண்ட வணிக வளாகத்தில் இருந்து இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கட்டிடத்தின் முழு தளத்திலும் இன்னும் முழுமையாக மீட்பு பணிகள் முடியவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தீயணைப்பு துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தீ இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கட்டிடத்தில் இருந்து சுமார் 60-70 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் ரவுட்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை முதல்கட்ட தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதல்” என்றுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
தீவிபத்து நடந்த இடத்திற்கு டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நேரில் சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.