வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 9ம் தேதி முடிவடைந்தது. ‘பங்குகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, 12ம் தேதி பங்கு ஒதுக்கீடு செய்யப்படும்’ என, எல்.ஐ.சி., அறிவித்திருந்தது.இந்நிலையில், எல்.ஐ.சி., காப்பீடு தாரர்கள் சார்பாக ‘பீப்பிள் பர்ஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதில், ‘எல்.ஐ.சி., பங்குகளை விற்பனை செய்வதற்காக சட்ட திருத்தம் செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும்; பங்கு ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘எல்.ஐ.சி., பங்கு ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது’ என, அமர்வு மறுத்து விட்டது.மேலும், இந்த வழக்கு தொடர்பாக எட்டு வாரங்களுக்குள் மத்திய அரசு, எல்.ஐ.சி., நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிட்டு, நீதிமன்றம் விசாரணையை தள்ளி வைத்தது.
Advertisement