தனுஷின் முதல் படம், `துள்ளுவதோ இளமை’ வெளியாகி 20 ஆண்டுகள் (மே 10, 2002) ஆகின்றன. சினிமாவில் தனுஷும் இருபதாண்டுகளைக் கொண்டாடுகிறார். இந்தப் பெருமைக்கு ஒரு வகையில் மிக முக்கிய காரணம் கஸ்தூரிராஜா. ஒரு தகப்பனாக மட்டுமில்லாமல், மகனை நடிகனாகவும் இயக்கியவர். இப்போது `பாமர இலக்கியம்’ என்ற புத்தகத்தை எழுதி, எழுத்தாளராகவும் புன்னகைக்கிறார். அவரிடம் தனுஷின் வளர்ச்சி குறித்தும், ஒரு நடிகனாக அவரின் பயணம் குறித்தும் பேசினோம்.
“என் புள்ளைங்க சினிமாவுல வரக்கூடாதுனு கண்டிப்பா இருந்தேன். அவங்களை ப்ரிவியூவிற்குக் கூட அழைச்சிட்டுப் போனதில்ல. ‘துள்ளுவதோ இளமை’யில் நடிக்க 150 இளைஞர்கள்கிட்ட பாத்திருப்பேன். தெலுங்கில் உதய் கிரண்னு ஒரு நடிகர் இருந்தார். அவர் இந்தப் படம் பண்றதா இருந்தது. நாங்களும் படத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம். நிதிப்பிரச்னை வேறு. அந்தச் சமயத்துலதான் நம்ம வீட்டுலயும் ஒரு பையன் இருக்கான்னு ஞாபகம் வந்தது. அப்ப உதய் கிரண் நடிச்சிருந்தா, தனுஷ் நடிக்கவே வந்திருக்க முடியாது.
‘துள்ளுவதோ இளமை’ பண்றதுக்கு செல்வராகவன்தான் ஐடியா கொடுத்தார். அந்த டைம்ல நான் ‘மாலைக் கருக்கலியே’னு ஒரு குறுநாவல் எழுதியிருந்தேன். அந்த நாவலை ஒரு கடையில பார்த்த செல்வராகவன், ‘இதை படமா எடுக்கலாமே’ன்னார். டீன் ஏஜ் பருவத்துல நடக்கற நிகழ்வுகள்தான் இந்தப் படம். அப்ப நான் கிராமியக் கதைகள் இயக்கிட்டிருந்ததால, இதைப் பண்ண தயங்கினேன். அப்ப செல்வா தான், ‘இந்தப் படம் பண்ணினாத்தான் நீங்க வேற ஒரு ஆடியன்ஸ்கிட்ட ரீச் ஆவீங்க’ன்னார். அந்த டைம்ல கிராம படங்களுக்கும் வேல்யூ குறைவா இருந்தது. இது ஒரு வித்தியாசமான படமாகவும் இருக்கும்னு இந்தப் படத்தை ஆரம்பிச்சேன்.
என்னோட கருவுல உருவான கதை, என்னோட படமாகவே வரணும்னா புதுமுகங்கள்தான் சரியா இருப்பாங்க. பெரிய நடிகர்கள் நடிச்சா, இந்தப் படத்துல பெரிய நடிகர்கள் நடிச்சிருக்காங்கன்னுதான் பெயர் வரும். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ கதை கட்டப்பொம்மனாக வெளிவரல. சிவாஜி படமாகத்தான் வெளிவந்தது. அதனாலதான் புதுமுகங்களை வச்சு நிறைய படங்கள் எடுத்திருப்பேன். டீன் ஏஜ் பருவத்தோட தேவை, தேடல்கள் எனக்கு தெரியாத விஷயம்னால செல்வா என் கூட இருந்தார்.
தனுஷுக்கு சினிமாவில் நடிக்கற ஆர்வம் இல்லை. அடுத்தடுத்து அஞ்சு படங்கள் பண்றவரைக்குமே கூட, அவர் சினிமாவைவிட்டு ஒருகால் வெளியவே வச்சிருந்தார். ஸ்கூலுக்குப் போயிருந்தவரை ஸ்பாட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன். ‘இங்கே ஏன் கூட்டிட்டு வந்தீங்க?’ன்னு அலறினார். அதுலயும் ஒரு பொண்ணு கையை பிடிச்சுட்டு பீச்சுல நடந்து போகற சீன் ஷூட் பண்றப்ப தனுஷுக்கு கை, காலெல்லாம் வெடவெடன்னு நடுங்குது.
ஒரு ஹாலிடேஸ்ல ஆரம்பிச்ச படம்… அதாவது 60 நாள்கள்ல எடுத்து முடிக்கறதா பிளான். ஆனா, ரெண்டு ஹாலிடேஸ் போனபிறகும் ஷூட் முடியல. பணப்பற்றாக்குறை. தனுஷின் படிப்பு போச்சு. அவரை ப்ளஸ் டூவில் இருந்து நானே இழுத்துட்டு வந்துட்டேன். வீட்டுல செல்வராகவன் மெக்கானிக்கல் இன்ஜினியர், தனுஷின் அக்காக்கள் ரெண்டு பேரும் டாக்டர்ஸ்… அதனாலேயே ஒரு பயத்துல நடிப்பில அவர் தன்னை ஈடுபடுத்திக்கிட்டாரான்னு கூட எனக்குத் தோணும். சினிமாவுல ஈடுபாடு இல்லாமல்தான் அவர் சினிமாவுக்குள் வந்தார். இன்னிக்கு வரைக்கும் அவருக்கு சினிமா லைஃப்ல ஈடுபாடில்லை. வேற என்னமோ ஒண்ணு அவருக்குள்ல இருக்கு.”
எழுத்தாளராகவும் மீண்டும் அவதாரம் எடுத்திருக்கீங்க…?
“விகடனாலதான் எழுத நேர்ந்தது. ‘பாமர இலக்கியம்’னு ஒரு நூல் எழுதியிருக்கேன். சினிமா எடுக்கறதை விட எழுதுறது ஆறுதலா இருக்கு. இந்த நூல் மூவாயிரம் பக்கம் வந்திடுச்சு. அப்புறம் அதை செதுக்கி செதுக்கி ஆயிரம் பக்கமாக்கினேன். தேனியின் வட்டார வழக்கு, எழுத்து நடையில எழுதியிருக்கறதால, நாவலுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. இலக்கியவாதிகள் பலரும் பாராட்டுறது சந்தோஷமா இருக்கு!”
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் முழுமையான பேட்டியை வீடியோவாக இங்கே காணலாம்.