புதுடில்லி:வெளிநாடுகளில் உள்ள தப்லிகி ஜமாத் உறுப்பினர்களின் எதிர்கால ‘விசா’ விண்ணப்பங்களை அவற்றின் தன்மைக்கு ஏற்ப பரிசீலிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2020ல் டில்லியில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை மீறி தப்லிகி ஜமாத் அமைப்பின் மாநாடு நடந்தது. இதையடுத்து இம்மாநாட்டில் பங்கேற்ற, 35 நாடுகளைச் சேர்ந்த, 2,700 பேரை மத்திய அரசு கருப்பு பட்டியலில் சேர்த்தது. இதனால் அவர்கள், 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர முடியாத நிலை உள்ளது.
இதை எதிர்த்து தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:விசா ரத்து செய்யப்பட்டதால் மனுதாரர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் சிலர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதனால் இனி வரும் காலங்களில் கருப்பு பட்டியலில் உள்ள தப்லிகி ஜமாத் அமைப்பினர் விசா கோரி விண்ணப்பித்தால், அந்தந்த நபரின் தன்மை, விபரங்களை ஆராய்ந்து விசா வழங்கும் முடிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement