கோவை: தமிழகத்தில் இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை என பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா இன்று (13-ம் தேதி ) நடந்தது. துணைவேந்தர் பி.காளிராஜ் வரவேற்றார். இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கே.சிவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.
அதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, ”தன்னிறைவு பெறும் இந்தியாவின் பயணத்தில் உங்களைப் போல் படித்தவர்களின் பங்களிப்பு முக்கியமானது. நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்துக்கு ஒரு பெரிய பங்குள்ளது. கல்வி, சுகாதாரம், தொழில்துறை போன்ற நிறைய விஷயங்களில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. அது மட்டும் போதாது நாட்டின் வளர்ச்சியில் தமிழகம் முக்கியப் பங்காற்ற வேண்டும்.
மத்திய அரசு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியை திணிக்கிறது என்பது போன்ற தவறான கண்ணோட்டத்தை உருவாக்கியுள்ளனர். அது தவறானதாகும். புதிய கல்விக் கொள்கையின் முக்கியமான நோக்கமே, பாடங்களை அவரவர்கள், அவர்களது தாய் மொழியில் படிக்க வேண்டும் என்பது தான். தமிழ் மொழி தொன்மையானது.
அதனால் தான் பிரதமர், சுப்பிரமணிய பாரதி இருக்கையை பனாரஸ் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தினால் தமிழ் மொழியின் பெருமையை விளக்கும் இருக்கைகளை பிற ஊர்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இந்தியை திணிக்க வேண்டும் என்ற திட்டமே இல்லை. நாங்கள் அனைத்து மொழிகளையும் ஒரே மாதிரியாகத் தான் பார்க்கிறோம்.
தமிழ் மொழியில் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகள். வாழ்க்கையில் ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும்,” என்றார். தமிழக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் கார்த்திகேயன், துணைவேந்தர் பி.காளிராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
500 ரூபாய் தாளால் சர்ச்சை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு நிகழ்ச்சி நிரல் விவரங்கள் அடங்கிய பைல் வழங்கப்பட்டது. அதில், பதிவாளர் பெயரிடப்பட்ட கவரில் ரூ.500 மதிப்புள்ள தாள் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செய்தியாளர்கள், ரூபாய் தாளுடன் கூடிய கவரை துணைவேந்தரிடம் ஒப்படைத்தனர். மீண்டும் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள செய்தியாளர்கள் துணைவேந்தரிடம் வலியுறுத்தினர்.