சென்னை: இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ, தமிழக அரசின் சார்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த ஏப்.29-ல் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அதில், ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.298 கோடி மதிப்புள்ள உயிர் காக்கும் 137 மருந்துப் பொருட்கள், ரூ.15 கோடியில் குழந்தைகளுக்கான 500 டன் பால்பவுடர் ஆகியவற்றை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாக வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்தப் பொருட்களை அனுப்பி வைக்க மத்திய அரசும் இசைவு தெரிவித்தது.
சென்னை, தூத்துக்குடியில் இருந்து…
இந்நிலையில், செய்தியாளர்களிடம் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கூறும்போது, “இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்க, 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, தூத்துக்குடியில் இருந்து பொருட்களை அனுப்ப உள்ளோம்.இம்மாத இறுதிக்குள் பொருட்களை அனுப்ப தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குநர் எஸ்.பிரபாகர், தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழக மேலாண் இயக்குநர் தீபக் ஜேக்கப், ஆவின் மேலாண் இயக்குநர் என்.சுப்பையன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் மத்திய அரசு அதிகாரிகளுடன் இணைந்து பொருட்களை அனுப்ப வேண்டும் என்றும், அரசுக்கு அவ்வப்போது அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களை பேக்கிங் செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும், அவற்றின் மீது மத்திய, மாநில அரசுகளின் முத்திரைகளுடன் ‘தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன்’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.