கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது காட்டு யானைகளின் நடமாட்டம் இருக்கும். அதிலும், கோடைக் காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடிக் காட்டு யானைகள் வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஊருக்குள் வருவது அதிகரித்துக் காணப்படும்.
தற்போது கோடை வெயில் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த சூழலில்தான், தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகில் உள்ள நல்லாம்பட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி காட்டுயானை ஒன்று உயிரிழந்திருப்பதாக அந்த சரக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, அந்த காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், நல்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்ற விவசாயி தனது வயலில் நெல் பயிரிட்டுள்ளார். வனப்பகுதியை ஒட்டியுள்ள இடம் என்பதனால், வயலைச் சுற்றிக் கண்காணிக்க மின்விளக்குகளை அமைத்துள்ளார். உணவு தேடி வயலுக்குள் வந்த யானை மின்விளக்குக்காகப் போடப்பட்டிருந்த வயர் பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. உயிரிழந்த யானை கொம்பு இல்லாத ஆண் யானை எனப்படும் `மக்னா’ யானை என்பதும் தெரியவந்துள்ளது.
இறந்த யானையை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அந்த யானையை அதே பகுதியில் புதைக்கவும் ஏற்படும் செய்தனர். மேலும், விவசாயி சீனிவாசனிடம் பாலக்கோடு சரக வனத்துறையினர் தீவிர விசாரணை செய்துவருகிறார்கள். இதேபோல, கன்னியாகுமரி மாவட்டம் மோதிரமலைப் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் காலில் காயங்களுடன் ஒரு பெண் காட்டுயானை விழுந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. காயமடைந்த யானைக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர்.