துளசி செடியை விற்பனை செய்து பேத்தியை படிக்க வைக்கும் 70 வயது மூதாட்டி!

உசிலம்பட்டி அருகே தாய் தந்தையின்றி பாட்டியின் அரவணைப்பில் கல்வி கனவுகளோடு ஏங்கி நிற்கும் ஏழை மாணவி, அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நோட்டம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள். கைம்பெண்ணான இவருக்கு, மூன்று பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் இருந்திருக்கின்றனர். அனைவருக்கும் தனியொருவராக நின்று திருமணம் செய்து வைத்துள்ளார் பொன்னம்மாள். இவரது மகனான கோவிலாண்டிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவிலாண்டியின் மனைவி சின்னம்மாள் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். அதன்பிறகு பேத்திகளையும் மகனையும் தன் அரவணைப்பில் இவர் வளர்த்து வந்தாக கூறப்படுகிறது.
image
இந்த நிலையில் கடந்த ஆண்டு கோவிலாண்டியும் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். இதனால் செய்வதறியாது தவித்த பொன்னம்மாள், மகன் சேர்த்து வைத்த சிறு தொகையையும், அக்கம் பக்கத்தினரிடம் கடனை வாங்கி மூத்த இரு பேத்திகளையும் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கடைசி பேத்தியான புவனா, தற்போது பூச்சிபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார். படிப்பிலும் கெட்டிக்கார பொண்ணாக உள்ளதால் அவரை நன்கு படிக்க வைக்க வேண்டும் என போராடி வருவதாக பொன்னம்மாள் நம்மிடையே தெரிவிக்கிறார்.
தனக்கும் தற்போது 70 வயதை கடந்தவிட்டதால், சிறு சிறு கூலி வேலைக்கு சென்று வருவதாக சொல்லும் இவர், பிரதானமாக துளசி செடியை உலர்த்தி அதை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் சிறு தொகையை வைத்து பேத்தியின் படிப்பிற்கும் உணவிற்குமாக உழைத்து வருவதாக கூறுகின்றார். மேலும் தனக்கு பின் தனது பேத்தியை யார் பார்த்துக் கொள்வார்கள் எனவும், அவளது படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுமோ என்ற ஏக்கத்துடன் தவிக்கும் பொன்னம்மாள் அரசு பேத்தியின் படிப்பிற்கும் வாழ்வாதரத்திற்கும் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்.
image
பேத்தியான புவனா நம்மிடையே பேசுகையில், “நான் நன்கு படித்து, போலிஸ் அதிகாரியாக வேண்டும். வேலையில் கிடைக்கும் பணத்தின் மூலம் எனது பாட்டியையும், அக்காகளையும் நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும். பாட்டி எனக்காக படும் கஷ்டங்களை நேரில் பார்த்து வளர்ந்து வருகிறேன். நான் போலிஸ் அதிகாரியாகி எனது பாட்டியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள ஆசையாக உள்ளது” என தெரிவிக்கிறார்.

அரசோ தன்னார்வ அமைப்பினரோ இந்த ஏழை மாணவியின் படிப்பிற்கும் வாழ்வாதாரத்திற்கும் உதவி செய்தால், அவர் முன்னேற்றமடைய வாய்ப்பு உள்ளதாகவும் அரசு உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.