தேசத் துரோகச் சட்டப் பிரிவு ஒழிக்கப்படுகிறதா, அல்லது வேறு ரூபத்தில் வருகிறதா?!

இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஆங்கிலேய ஆட்சியாளர்களால் Sedition எனப்படும் ராஜ துரோகத்துக்காக சட்டப் பிரிவு 124 ஏ, இந்திய தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த கொடுங்கோல் சட்டப் பிரிவு ஒழிக்கப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டுவருகிறது. இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோதும் அதன் பிறகும், பிரிவு 124 ஏ ஒழிக்கப்பட வேண்டும் என்பது பற்றிய விவாதங்கள் நடைபெற்றன.

உச்ச நீதிமன்றம்

எந்தவொரு குடியரசு நாட்டிலும் இதுபோன்ற சட்டம் இருக்க முடியாது என்று ஜவஹர்லால் நேரு உட்பட பல தலைவர்களும் கூறியிருக்கிறார்கள். பிரிவு 124 ஏ செல்லாது என்று உச்ச நீதிமன்றம் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது. தேசத் துரோகச் சட்டத்தைக் கொண்டுவந்த ஆங்கிலேயர்கள்கூட, தங்கள் நாட்டில் அந்தச் சட்டத்தை நீக்கிவிட்டனர். ஆனால், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்தியாவில் இன்னும் அது ஒழிக்கப்படவில்லை.

அரசுக்கு எதிராகப் பேசுதல், எழுதுதல், அரசை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளுதல் அல்லது நடந்துகொள்ள ஊக்குவித்தல் ஆகியவை தேசத் துரோகம் என்று பிரிவு 124 ஏ கூறுகிறது. ஒருவர் மீது பிரிவு 124 ஏ பாய்ந்தால், அவர் ஜாமீனில் வெளிவர முடியாது. குற்றம் உறுதிசெய்யப்பட்டால் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் சிறை முதல் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கப்படும். அபராதமும் விதிக்கப்படும்.

என்.வி.ரமணா

காலனியாதிக்கக் காலத்தில் உருவாக்கப்பட்ட அந்தச் சட்டம், இன்றைக்கு மக்களின் கருத்துரிமையை நசுக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக ‘யங் இந்தியா’வில் கட்டுரை எழுதியதற்காக மகாத்மா காந்தி மீது பிரிவு 124 ஏ பாய்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சியை விமர்சித்து ’கேசரி’ பத்திரிகையில் பாலகங்காதர திலகர் எழுதியதற்காக இந்தப் பிரிவின் கீழ் 18 மாதங்கள் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். பகத்சிங் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் மீது இந்த சட்டப்பிரிவை ஆங்கிலேயர்கள் ஏவினர்.

இன்றைக்கு, ஆட்சியாளர்களுக்கு எதிரான குரல்களை நசுக்குவதற்காக இந்த சட்டப்பிரிவு இங்கு பயன்படுத்தப்படுகிறது. சமூக ஊடகங்களில் அரசை விமர்சிப்பவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள் உள்பட பலர் மீது கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக இந்த சட்டப் பிரிவு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 2015 முதல் 2020 வரை பிரிவு 124 ஏ-யின் கீழ் 356 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாக தேசிய குற்ற ஆவணப் பிரிவின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில்தான், பிரிவு 124 ஏ-வை நீக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், அது குறித்து மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. பிரிவு 124 ஏ-வை நீக்க வேண்டிய அவசியமில்லை என்கிற தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தெரிவித்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் கொண்ட அமர்வால் மே 5-ம் தேதி விசாரிக்கப்பட்டது. அப்போது, ‘பிரிவு 124 ஏ-வுக்கு எதிரான வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றலாமா என்று ஆராயப்படும்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், மத்திய அரசு பதிலளிப்பதற்கு காலஅவகாசத்தையும் உச்ச நீதிமன்றம் வழங்கியது. பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரிவு 124 ஏ-வை மறுபரிசீலனை செய்வதாக மத்திய அரசு கூறியது.

உடனே, “தேசத் துரோக சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும்வரை, பிரிவு 124 ஏ-வை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்” என்று மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். அதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், “மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை இந்தப் பிரிவு பயன்படுத்தப்படுவதை நிறுத்திவைக்க வேண்டும். அந்தப் பிரிவின் கீழ் எந்தவொரு வழக்கையும் மத்திய, மாநில அரசுகள் பதியக் கூடாது” என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு ஜூலை 3-வது வாரம் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.

பிரதமர் மோடி

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் வரவேற்றுள்ளனர். தேசிய பாதுகாப்புச் சட்டம், உபா சட்டம் உட்பட கடுமையான சட்டங்கள் அரசின் கையில் இருக்கின்றன. அவற்றின் கீழ் வழக்குகள் பதியப்படுகின்றன. குறிப்பாக, ஆட்சியாளர்களை விமர்சிப்பவர்கள் மீது இத்தகைய சட்டங்கள் பாய்கின்றன. எனவே, நீதிமன்றத்தின் அழுத்தம் காரணமாக, 100 ஆண்டுகள் பழைமையான சட்டப்பிரிவான 124 ஏ-வை நீக்குவதற்கான முடிவை அரசு எடுக்கலாம் என்கிறார்கள். எனினும் மத்திய அரசின் முடிவு இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையின் போது தெரிய வரும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.