தேனி:
தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்குட்பட்ட பூக்கோட்டை ஊராட்சியில் பாலார்பட்டி கிராமம் உள்ளது. இங்கு அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் குறைபாடு இருப்பதை அறிந்த கிராமமக்கள் அதனை தங்கள் சொந்த செலவில் வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி பீரோ, நாற்காலி, எழுது–பொருட்கள், புத்தகங்கள், மின்விசிறி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம், மின்மோட்டார், பாத்திரங்கள் என சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வாங்கப்பட்டன.
அந்த பொருட்கள் ஒரு டிராக்டரில் ஏற்றப்பட்டு பள்ளிக்கு கொண்டுவரப்பட்டன. பள்ளி அருகே மேளதாளம் முழங்க மாணவர்கள் சிலம்பம் ஆடியபடியே கொண்டு வந்தனர். அனைத்து பொருட்களையும் தலைமை ஆசிரியர் ஜோஸ்பினிடம் கிராம மக்கள் வழங்கினர். இதனை தொடர்ந்து பள்ளியின் ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கிய கிராமமக்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து விழாவில் கவுரவித்தனர்.