கடந்த பொதுத் தேர்தலில் வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்த ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த ரணில் விக்ரமசிங்கவினால் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும் என எண்ணிய பலருக்கு இன்றைய ரணிலின் அவதாரம் பிரம்மிக்க வைக்கலாம்.
225 பேர் சூழ்ந்திருந்த அவையில் தனியொருவருவராக இருந்து இன்றைய இலங்கை அரசியலில் கிங் மேக்கராக திகழ்கின்றார்.
1970 களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக தனது அரசியல் பயணத்தினை ஆரம்பித்தார் ரணில், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்தார்.
அதனைத் தொடர்ந்து 1980ஆம் ஆண்டு கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்று ஒன்பது ஆண்டுகளாக பதவி வகித்த நிலையில் 1993ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கையின் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தார்.
அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு அவர் ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றார், இன்று வரை அந்தப் பதவியில் தொடர்ந்து கொண்டும் உள்ளார்.
பின்னரான காலப்பகுதியில், 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிக் கொண்டார்.
அப்போது ஆட்சியில் இருந்த சந்திரிக்கா தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டபோது 2001ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ரணில் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியதிகாரத்தைக் கைப்பறியது. மீண்டும் ஒருமுறை ரணில் விக்ரமசிங்க பிரதமரானார்.
எனினும், அவரது பதவிக் காலம் முடியும் முன்னதாகவே அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் நடவடிக்கையால் ரணில் தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்பட்டது.
அதன் பின்னர் நடத்தப்பட்ட தேர்தலிலும் ரணில் தோல்வியையே தழுவிக் கொண்டார்.
மீண்டும் 2005ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலிலும், ரணில் விக்ரமசிங்க தோல்வியைத் தழுவிக் கொண்டதுடன், ராஜபக்ச குடும்பத்தாரின் குடும்ப எழுச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டதும் அந்தத் தேர்தலே.
2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெற்றி வாகை சூடிக் கொண்டதுடன் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை கையேற்றார்.
இவ்வாறு தொடர் தோல்விகளைச் சந்தித்த ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததும் பெறும் தோல்வியாகவே அமைந்தது.
மூன்று தசாப்த காலங்களாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அந்த அரசு யுத்த வெற்றியை பிரதானமாகக் கொண்டு 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பறிக் கொண்டது.
[4QIFM
எனினும், ரணில் விக்ரமசிங்க தலைமையில் இறுதிப் போரை வழிநடத்திய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்பட்டு தோல்வியைக் கண்டதுடன், ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் களமிறங்கவில்லை என்பதுடன், யானை சின்னத்துக்கு பதிலாக அன்னப்பறவை சின்னமே முன்னிலைப்படுத்தப்பட்டது.
இடையில் கண்ட பல தோல்விகள் ரணிலின் அடுத்த அரசியல் நகர்வுக்கு மிகப்பெரிய பலமாகவே இருந்தது எனலாம், பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டிய நிலை ரணிலுக்கு ஏற்பட்டாலும், நிதானித்து காய் நகர்த்தல்களை மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்க அந்த 2015ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை களமிறக்கினார்.
இது, ராஜபக்சவின் அரசியல் வரலாற்றில் ஒரு சிறிய சறுக்கலை ஏற்படுத்தியதுடன் ரணிலுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பாக அமைந்தது.
அந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியதுடன், மீண்டும் பிரதமர் பதவிக்குத் தேர்வானார், அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு நடத்தப்பட்ட பொதுத் தேர்தலிலும் மிகப்பெரிய வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தார் ரணில்.
பதவிக்கு வந்தவுடன் அதிரடியான பல மாற்றங்களை ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்தியிருந்தார்.
அதில் ஒன்று அரசியலமைப்பு சீர்த்திருத்தம். 18ஆவது சீர்த்திருத்தத்தில் இருந்த ஒருவர் எத்தனை முறை வேண்டும் என்றாலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலை 19ஆவது அரசியலமைப்பின் மூலம் மாற்றியமைக்கப்பட்டது.
எனினும், ரணிலின் நிர்வாகத்திற்கும், மைத்திரியின் ஆளுமைக்கும் இடையில் ஒத்துவராததனால் என்னவோ இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் அதிகரித்து கொண்டே இருந்தன.
இதன் விளைவு யாரும் எதிர்பாராத நேரத்தில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக அறிவித்தார் மைத்திரி…
திடீரென ஏற்பட்ட இந்த அரசியல் மாற்றம் இலங்கையை ஸ்தம்பிதம் அடையச் செய்தது எனலாம். இது ரணிலின் பயணத்தில் ஏற்பட்ட மற்றுமொரு அடி.
அதன் பின்னரான நீதிமன்ற நகர்வுகளையடுத்து, எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றார்.
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறியாகவே இருந்தார்.
எனினும், கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்ததாலும், பங்காளிகள் விடாப்பிடியாக நின்றதாலும், நாட்டு மக்கள் சஜித்தை கோரியதாலும் மூன்றாவது முறையும் தியாகம் செய்ய வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்ததோடு, கட்சி இரண்டாக பிளவடைந்து சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உயதமானது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தலில் இரு அணிகளும் தனித்தனியாகவே போட்டியிட்டன. இதில் ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களைக் கைப்பற்றியது.
ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரிய வரலாற்றுத் தோல்விகளைத் தழுவிக் கொண்டது. தேர்தலின் மூலம் ஒரு ஆசனத்தைக் கூட பெற முடியாத துரதிஷ்ட நிலைக்கு கட்சித் தள்ளப்பட்டது.
ஐக்கிய தேசியக்கட்சி படுதோல்வியை சந்தித்து நாடு முழுவதும் 2.15% வாக்குகளையே பெற்றது. அத்துடன், தேசியப்பட்டியல் ஊடாக ஒரு வாய்ப்பு கிடைத்தது.
நாடாளுமன்ற அரசியலுக்கு வந்த பிறகு ரணில் எந்தவொரு பொதுத்தேர்தலிலும் தோற்றதில்லை. 42 வருடங்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனையும் படைத்துள்ளார்.
எனினும், கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் ஆதரவை இழந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசியப்பட்டியல் ஊடாக மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.
பாரிய அரசியல் அனுபவம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவி வகித்த போதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதோடு, ஜனாதிபதி பதவி என்பது அவரைப் பொறுத்த மட்டில் கைக்கு எட்டாத ஒன்றாகவே உள்ளது.
நாடாளுமன்ற மீள் பிரவேசத்தின் பின்னர் அப்போதைய பிரதமர் மகிந்தவும், ரணிலும் பங்கேற்ற இரவு விருந்தொன்று பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக இப்போதைய மாற்றங்கள் அப்போதே சர்ச்சைகளாக வலம் வந்தன என்றுகூட கூறலாம்.
இதன் பின்னரான நாட்களில் இலங்கையின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் விழுந்த போது, இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வந்த பின்னணியில், ரணில் விக்ரமசிங்கவின் ஆளுமை மற்றும் அவருக்கு சர்வதேசத்தில் இருக்கும் தொடர்புகள், அதனை கையாளும் திறன் ஆகியவற்றினால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காணும் திறன் அவருக்கிருப்பதாக பலரும் கருதினர்.
இவ்வாறானப் பிண்ணனியில் தற்போதைய பிரதமராக ரணில் பதவியேற்றிருந்தாலும் கூட அவரது இலக்கு அடுத்த தலைமைப் பொறுப்பே என பலராலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அரசியல் களத்தைப் பொறுத்தமட்டில் ரணில் விக்ரமசிங்க ஒரு குள்ளநரியாக பலராலும் வர்ணிக்கப்படுகின்றார், அதற்கு சிறந்த உதாரணமாக ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை வைத்துக் கொண்டு தற்போதைய ஆட்சி அதிகாரத்திற்கு வந்தமையை கூறலாம்.
தோல்விகள் மட்டும் அல்ல ரணிலை சர்ச்சைகளும் காலத்திற்கு காலம் சூழ்ந்து கொண்டுதான் இருந்தன.
குறிப்பாக மத்திய வங்கியில் மேற்கொள்ளப்பட்ட பிணை முறி மோசடி ரணிலின் பெயருக்கு மிகப்பெரிய களங்கத்தை கொண்டு வந்திருந்தது.
எனினும், அந்தக் குற்றச்சாட்டுக்களையோ, வசைபாடல்களையோ கண்டுகொள்ளவோ, எதிர்வினையாற்றும் செயலையோ ரணில் செய்யவில்லை.
அதிலும், மத்திய வங்கியின் பிணைமுறியுடன் தொடர்புடையவர்கள் எனது வாளுக்கு இலக்காவார்கள் என்று தனது இறுதி ஜனாதிபதி பதவி இருக்கும் நாள் வரை பூச்சாண்டிக் காட்டிக்கொண்டிருந்த மைத்திரியின் வசைபாடலுக்கும் அவர் இசைந்து கொடுத்ததில்லை.
அதேசமயம், அரசியலில் எதிர்வுகூறும் திறன் ரணிலுக்கு அதிகம் இருப்பது அனைவரும் அறிந்தது, இதனை வைத்துதான் என்னவோ 2020இல் பொதுத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தபோதும் தமது கட்சியினரை அமைதிகாக்குமாறும், சிறிது காலத்தின் பின்னர் நிலைமை தலைகீழாக மாறும் அப்போது நாம் செயலாற்றலாம் என அறிவித்ததாக செய்திகள் பல வெளிவந்திருந்தன.
அந்த தீர்க்கதரிசனத்தின் விளைவு என்று கூட இதனைச் சொல்லலாம்.
ஆனால், இந்த பொருளாதார நெருக்கடியை ரணிலால் தீர்க்க முடியும் என்பதற்கு காரணம், அவரது சர்வதேச தொடர்புகளும், தந்திரங்களும், எதிர்வுகூறும் திறனும், கையாள வேண்டிய நடைமுறையும் அறிந்திருப்பதாலாகும்.
அவரை நரி என்று கூற அவரது ஆளுமைக் கூட காரணமாக இருக்கலாம். மிகவும் பொறுமையாக இருந்து, அலட்டல் இல்லாத ரணிலின் காய் நகர்த்தல்களும், அரசியல் நாகரீகமும் கூட அவரின் இந்த பெயருக்குக் காரணமாக இருக்கலாம். சிலர் கோபத்தால் அவரை நரி என்று வசைபாடவும் கூடும்.
இந்த நிலையில் சர்வதேச ஊடகம் ஒன்றின் செய்தியின்படி, எந்தவொரு தலைவனுக்கும் இல்லாத சர்வதேச தொடர்பு ரணிலுக்கு இருக்கின்றது என்பது அறியக் கிடைத்தது. ரணில் விக்ரமசிங்கவின் ஆளுமை, பொறுமை, ராஜதந்திர உறவு, அவசரத்தில் தீர்மானங்களை எடுக்காமை மற்றும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் திறன் போன்றன கூட அவரை நரி என்று சொல்ல காரணமாக இருக்கலாம்.
எனினும் புதிதாக அவர் பிரதமர் பதவியை தற்போது ஏற்றிருந்தாலும் கூட இதற்கு பின்னாலும் அவரது சில தந்திரங்கள் இருப்பதாகவே கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக பிரதமர் பதவியை ஏற்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பலருக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும், சஜித் மற்றும் அநுர உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகினால் பதவியேற்கத் தயார் என்றனர்.
ஆனால், ரணில் ஒருவரே தான் பதவியேற்கின்றேன் ஆனால் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை கலைக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற உறுதியை கோட்டாபயவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
குறிப்பாகச் சொல்லப் போனால், போராட்டக் காரர்களின் முதல் கோஷமாக இருந்தது கோட்டாபய பதவி விலக வேண்டும் என்பது, தற்போதும் அதுவே அவர்களின் கோஷமாக இருக்கின்றது. இவ்வாறு இருக்க போராட்டங்கள் நடக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டது கோட்டாபயவின் பதவிக்கு ரணில் வைக்கும் மறைமுக செக் காக இருக்கலாம் என அரசியல் பரப்பில் கருத்துக்கள் நிலவுகின்றன.
இப்போதும், ராஜபக்சவர்களின் பாதுகாவலரே ரணில் பன பலரும் தெரிவித்தாலும், அதனைப் பற்றி அக்கறையின்று கோட்டா கோ கம போராட்டக்காரர்களை நான் களைந்து செல்ல கூற மாட்டேன் என்றும், பொலிஸார் இடையூறு பிறப்பிக்க மாட்டார்கள் என்றும் பிரதமரானதும் தனது முதலாவது உத்தரவாக தெரிவித்து அமைதியான முறையில் தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் ரணில்…
எது எவ்வாறு இருப்பினும், பொருளாதார நெருக்கடிகள் இலங்கையை ஆக்கிரமிக்க தொடங்கிய போது ஆட்சிக் கவிழ்ப்பிற்கான நேரம் இது அல்ல எனவும், பொருளாதாரத்தை சீர் செய்யக் கூடிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அதேசமயம் பொருளாதார நெருக்கடிகள் உக்கிரமடைந்த காலப்பகுதியில் நடத்தப்பட்ட சர்வகட்சி மாநாட்டிலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது குறித்து கடுமையாக வலியுறுத்தியிருந்தார்.
அதன் பின்னர் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் எதிரப்பு நடவடிக்கைகள், பேரணிகள் என்பவற்றை அமைதியாக அவதானித்து வந்த நிலையில், சந்தர்ப்பம் கிடைத்தால் பதவி ஏற்க தயார் என்ற அறிவிப்பையும் அவர் விடுத்திருந்தார்.
இடையில் பிரதமர் பதவியை ஏற்க பலரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தபோதும், சஜித் மற்றும் அநுர உள்ளிட்டோரின் பதில்கள் நிச்சயமற் நிலையிலும், விடுக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதது என தெரிவித்தும் இறுதி நேரத்தில் ரணிலிடம் பிரதமர் பதவி ஒப்படைக்கப்பட்டது.
அத்துடன், இது ரணிலுக்கு கிடைத்த எதிர்பாராத அதிர்ஷ்டமாக இருக்கலாம் என சிலர் கருதுவதோடு, பதவிக்காக முன்னெடுக்கப்பட்ட காய் நகர்த்தல்களாக கூட இருக்கலாம் எனவும் தோன்றுகின்றது.
பொறுத்திருந்து பார்க்கலாம் அடுத்து விழப்போகும் காய் எது என்று!!