சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறிழைக்கும்போது நிலைமை கைமீறி சென்றால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்கள் அறக்கட்டளை சார்பில், `குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களின் கல்வியில் புதிய போக்குகள்’ குறித்த ஆய்வுக் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
இக்கருத்தரங்கை, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்துப் பேசியதாவது:
மகளிர் கல்வி மேம்பாட்டுக்கு உதவும் வகையில், கல்வி உதவித்தொகை உட்பட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.அதேபோல், கரோனா ஊரடங்குக்குப் பின்னர் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரிசெய்யும் வகையில், பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், ஸ்டெல்லா மேரிஸ்கல்லூரி முதல்வர் ரோஷி ஜோசப் மற்றும் வளரிளம் பெண்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவி கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
பதின்பருவ மாணவர்களை நல்வழியில் வளர்த்தெடுப்பது குறித்தும், கற்றல் இடைவெளி, ஒழுக்கக் குறைபாடு ஆகியவற்றை சரிசெய்யும் வழிமுறைகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். மேலும், சமூக, பொருளாதார பின்னடைவுகள் மாணவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தவறான தாக்கங்களைத் தவிர்க்க வேண்டும். இதுதொடர்பாக ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர, ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்ளும் நிகழ்வுகளைத் தவிர்க்க, நன்னெறி வகுப்புகள், உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. அதன் பின்னரும், பள்ளி வளாகங்களில் வரம்புகளை மீறி தவறிழைக்கும் போதுதான், மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தருவதற்கு முடிவெடுத்துள்ளோம். மாணவர்களை நல்வழிப்படுத்துவதிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்படும். எனினும், நிலைமை கைமீறிச் சென்றால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்.
பள்ளிகளில் தவறாக நடந்துகொள்ளும் மாணவர்களை விசாரிக்க ஒழுங்குக் குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் முடிவின் அடிப்படையில், இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மாணவர்கள் இனி எவ்வித தவறான செயல்களிலும் ஈடுபடக்கூடாது.
பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்காக, பள்ளி வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கவில்லை. முதல்வருடன் கலந்து ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.