இந்திய நிகழ்வுகள்
பயங்கரவாதிகள் அட்டூழியம் காஷ்மீர் பண்டிட் கொலை
ஸ்ரீநகர்:அரசு அலுவலகத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள், காஷ்மீர் பண்டிட் ஒருவரை சுட்டுக் கொன்றனர்.ஜம்மு – காஷ்மீரின் புட்காம் மாவட்டம், ஷேக்புரா பகுதியில் வசித்தவர் ராகுல் பட். காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த இவர், தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று இங்கு வந்த பயங்கரவாதிகள், ராகுலை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். சக ஊழியர்கள் ராகுலை மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
மாஜி எம்.எல்.ஏ.,வின் ரூ 133 கோடி பறிமுதல்
புதுடில்லி-சட்ட விரோத பண மோசடி வழக்கில், ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஜிதேந்திர நாத் பட்நாயக்கின் ௧௩௩ கோடி ரூபாயை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து உள்ளது.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமை யில் பிஜு ஜனதாதளம் ஆட்சி நடக்கிறது. இங்கு முன்னாள் எம்.எல்.ஏ., ஜிதேந்திர நாத், சட்ட விரோதமாக நிலக்கரி சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்ததாகவும், அதனால், மாநில அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இது பற்றி மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த முறைகேடில் நடந்த சட்ட விரோத பண பரிமாற்றம் பற்றி அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஜிதேந்திர நாத்திற்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இதில், ரொக்கமாக ௭௦ லட்சம் ரூபாயையும், பல்வேறு வங்கிகளில், ‘டிபாசிட்’ செய்யப்பட்டிருந்த ௧௩௩.௧௭ கோடி ரூபாயையும், அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாஜி முதல்வர் மீது பண மோசடி வழக்கு
அமராவதி-ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சந்திரபாபு நாயுடு, 2014 முதல் 2019 வரை முதல்வராக பதவி வகித்தார்.அப்போது, மாநில தலைநகர் ஹைதராபாதில் இருந்து அமராவதிக்கு மாற்றப்பட்டது. அதன், ‘மாஸ்டர் பிளான்’ மற்றும் உள்வட்ட சாலை சீரமைப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக, ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சி எம்.எல்.ஏ., ராமகிருஷ்ண ரெட்டி புகார் அளித்தார். இதுபற்றி விசாரித்த சி.ஐ.டி., போலீசார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் அமைச்சர் பி.நாராயணா மற்றும் சில தொழிலதிபர்கள் மீது, மோசடி, குற்றச்சதி, ஊழல் ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக நிகழ்வுகள்
செய்தியாளர்கள் மீது தாக்குதல்: விசாரணைக்கு வலியுறுத்தல்
மதுரை : மதுரை மாநகராட்சியில் செய்தியாளர்களை தாக்கிய தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூ., வலியுறுத்தி உள்ளது.
மதுரை நகர் செயலாளர் கணேசன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளதாவது: மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் கூட்டம் துவங்கும் முன் இருக்கைகள் ஒதுக்கீடு தொடர்பாக அரங்கிற்குள் கவுன்சிலர்களுக்குள் குளறுபடி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கவுன்சிலர் கூட்டத்தில் கவுன்சிலர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அ.தி.மு.க.,விற்கு வழக்கப்படி இருக்கை ஒதுக்கியிருக்க வேண்டும்.
இதுகுறித்து மேயரிடம் முறையிட அவர்கள் சென்ற போது செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து விசாரணை நடத்தி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி கடத்திய 2 பேர் கைது
திருமங்கலம் : கூடக்கோவில் அருகே எலியார்பத்தி ரோட்டோரம் சரக்கு வாகனம் நின்றிருந்தது. அந்த வழியாக வந்த பெருங்குடி போலீஸ் ஸ்டேஷன் தனிப்பிரிவு போலீஸ்காரர் லிங்குசாமி வாகனத்தில் இருந்த மதுரை முனிச்சாலை கவுதம் 27, அனுப்பானடிமுனீஸ்வரன் 25, ஆகியோரிடம் விசாரித்தபோது, ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. கூடக்கோவில் போலீசார் இருவரையும் கைது செய்து 3500 கிலோ ரேஷன் அரிசி, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
நீட் எழுதிய மாணவியிடம் ரூ 6 லட்சம் நூதன மோசடி
சேலம்:’நீட்’ தேர்வு எழுதிய மாணவியிடம், மருத்துவ கல்லுாரியில் இடம் பெற்றுத் தருவதாக கூறி, 6 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
சேலம், கிருஷ்ணம்மாள் நகர், எம்.கே., அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த சரவணன் மகள் ரோஷ்னி, 19. இவர், நீட் நுழைவு தேர்வு எழுதி, முடிவுக்கு காத்திருந்தார்.அரசு மருத்துவ கல்லுாரியில் சேர தொடர்பு கொள்ளும்படி, ஏப்., 2ம் தேதி அவரது மொபைல் போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது.
அந்த எண்ணில் ரோஷ்னி தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய நபர், ‘டில்லியில் இருந்து ஹர்ஷவர்தன்’ என, அறிமுகப்படுத்திக் கொண்டார்.அத்துடன், ‘ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் அரசு மருத்துவ கல்லுாரிகளில் சீட் வாங்கி தர முடியும்’ என, கூறியுள்ளார்.////
இதை நம்பிய ரோஷ்னியிடம், ஆந்திராவின் அனந்தபூர் மருத்துவ கல்லுாரியில் இடம் பெற்றுத் தருவதாக கூறி, சேர்க்கை கட்டணத்தை செலுத்த, ஒரு வங்கி கணக்கை அந்த நபர் கொடுத்தார். அதில், 6 லட்சம் ரூபாயை ரோஷ்னி செலுத்தினார். அதன் பிறகு, அந்த எண்ணில் தொடர்பு கொண்ட போது ‘சுவிட்ச் ஆப்’ என தகவல் வந்தது.ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரோஷ்னி, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
3 சிறுமியிடம் அத்துமீறியவருக்கு 60 ஆண்டு சிறை
திருப்பூர்:திருப்பூரில் மூன்று சிறுமியரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய தொழிலாளிக்கு, கோர்ட் 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.திருப்பூர் பலவஞ்சிபாளையத்தைச்சேர்ந்தவர் கதிரேசன், 46; கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் அதே பகுதியைச்சேர்ந்த மூன்று சிறுமியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்படி, திருப்பூர் தெற்கு மகளிர் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.இவ்வழக்கு, திருப்பூர் மகிளா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில், குற்றவாளி கதிரேசனுக்கு போக்சோ சட்டத்தில், 60 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி நாகராஜ் தீர்ப்பளித்தார்.
மகனை கண்டித்து தந்தை தர்ணா
பனமரத்துப்பட்டி:சேலம் தாசநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் 80; ஓய்வு பெற்ற ஆசிரியர். மனைவி கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.
இவரது ஒரு மகன் ஒரு மகள் தாசநாயக்கன்பட்டியிலும் மற்றொரு மகள் வெளியூரிலும் வசிக்கின்றனர்.தாசநாயக்கன்பட்டியில் உள்ள மகள் வீட்டில் வெங்கடேசன் தங்கி இருந்தார். இந்நிலையில் மகன் கவனிக்கவில்லை என மல்லுார் போலீசில் அவர் புகார் அளித்தார்.
போலீசார் ஆர்.டி.ஓ.வுக்கு புகாரை பரிந்துரைத்தனர்.மகள் வீட்டினர் வெங்கடேசனை நேற்று மகன் வீட்டில் கொண்டு வந்து விட்டனர். அங்கு அவர் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது:வீடு மகனுக்கு எழுதி கொடுக்கப்பட்டது. ஆனால் மாடியில் அவர் குடும்பத்துடன் வசிக்கவும் தரைத்தளத்தில் நான் வாழ்நாள் முழுதும் தங்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. நான் என் மகள் வீட்டுக்கு சென்றதால் தரைத்தளத்தை மகன் வாடகைக்கு விட்டுள்ளார். வீட்டில் வசிக்க என்னை அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து மல்லுார் போலீசார் பேச்சு நடத்தி வருகின்றனர்.
செவிலியர் தினத்தில் நர்ஸ் பரிதாப பலி
திருநெல்வேலி:மூளைச்சாவு அடைந்த நர்ஸ் ஒருவர், செவிலியர் தினமான நேற்று இறந்தார்.
துாத்துக்குடி மாவட்டம்,கழுகுமலையைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி முருகலட்சுமி, 36; திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றினார்.மே 4ல் தலைவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; மே 7ல் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். மீண்டும் மயங்கி விழுந்ததால், மே 8ல் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவர் மூளைச்சாவு அடைந்தார்.நான்கு நாட்களாக சிகிச்சை அளிக்கப்படாமல் மருத்துவ மனையிலேயே வைக்கப்பட்டிருந்தார் என புகார் எழுந்தது. நேற்று அவர் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
முருகலட்சுமியின் கணவர் சின்னதம்பி, ஹிந்து முன்னணி, கழுகுமலை ஒன்றிய துணைத் தலைவராக உள்ளார். ஹிந்து முன்னணி மாநில நிர்வாகிகள் நேற்று அரசு மருத்துவ மனையில் ‘டீன்’ ரவிச்சந்திரனுடன் பேச்சு நடத்தினர்.முருகலட்சுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பது குறித்து,எம்.ஆர்.ஐ., ஸ்கேனில் தெரிந்தும், டாக்டர்கள் சிகிச்சை அளிக்கவில்லை.
ஸ்கேன் முடிவுகளை பார்க்காமலேயே அவரை மே 7ல் டிஸ்சார்ஜ் செய்தனர்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து இருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்கக்கூடும். மூளைச்சாவு அடைந்த பிறகும், அவரது உடலை தானம் அளிக்க, அரசு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை என, கூறினர்.சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஹிந்து முன்னணியினர் தெரிவித்தனர். நேற்றுமுருகலட்சுமி உடலை பெற மறுத்து விட்டனர்.
சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: 4 மாணவர்கள் கைது
காசிமேடு: சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நான்கு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம் காசிமேடு பகுதியில் இரு தினங்களுக்கு முன் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டிற்கு அதே பள்ளியில் படிக்கும் நான்கு சிறுவர்கள் சேர்ந்து படிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லை. இதை அறிந்த சிறுவர்கள் நால்வரும் சிறுமியின் கையை கட்டிப் போட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து சிறுமி தாயிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் பள்ளி ஆசிரியரிடம் புகார் தெரிவிக்கவே வீட்டில் நடந்த சம்பவம் என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து 13 வயதுடைய நான்கு சிறுவர்களையும் போலீசார் கைது செய்து நேற்று மதியம் கெல்லிஸ் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.
உலக நிகழ்வுகள்
விமானம் தீப் பிடித்து 40 பேர் காயம்
பீஜிங்-சீனாவில் ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்ற விமானம் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இதில், 40 பேர் லேசான காயங்களுடன் தப்பினர்.நம் அண்டை நாடான சீனாவின் தென்மேற்கே உள்ள சோங்கியிங் நகரில் இருந்து, அந்நாட்டின் கட்டுப்பாட்டிலிருக்கும் திபெத்தில் உள்ள நியிங்க்சி நகருக்கு, சீன விமானம் ஒன்று நேற்று காலை புறப்பட்டது.ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த விமானம், திடீரென அதிலிருந்து விலகிச் சென்றது. இதன் இன்ஜின் தரையில் பட்டதால், விமானத்தில் தீப்பற்றியது. உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அதில் இருந்த, ஒன்பது ஊழியர்கள், 113 பயணியர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், 40 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த மார்ச் 12ல் டென்ஜியானில் நடந்த விமான விபத்தில், 132 பேர் உயிரிழந்தனர். இது, 1994க்குப் பின் சீனாவில் நடந்த மிகவும் மோசமான விபத்தாகும். இந்நிலையில், இரண்டு மாதத்துக்குள் மற்றொரு விமானம் விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.