விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள பேய்க்குளம் சென்று விட்டு விருதுநகர் நோக்கி ஒரு டவுன் பஸ் இன்று காலை 7.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்சில் இடம் இல்லாமல் படிக்கட்டு வரை நின்று கொண்டிருந்தனர்.
சில கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தனர். இந்த பஸ்சை ஜெயராமன் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது கண்டக்டர் முத்துராஜா படிக்கட்டில் பயணம் செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று தெரிவித்து மாணவர்களை உள்ளே வரும்படி கண்டிப்புடன் கூறி உள்ளார்.
ஆனால் பஸ்சில் இடம் இல்லாமல் எப்படி உள்ளே வர முடியும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அந்த பஸ் 8.30 மணி அளவில் , விருதுநகர் பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கல்லூரி மாணவர்கள் சிலர் தகராறு செய்தனர்.
இதையடுத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர், டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கியுள்ளனர். இதனைக் கண்ட மற்றொரு அரசு பஸ் டிரைவரான பெரிய கருப்பன் என்பவர் சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது கல்லூரி மாணவர்கள் அவரையும் தாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து 2 டிரைவர்கள் மற்றும் கண்டக்டர் மாணவர்களை திருப்பி தாக்கியதாக கூறப்படுகிறது. காலை நேரம் என்பதால் பஸ் நிலையத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.
அவர்களின் முன்னிலையில் கல்லூரி மாணவர்கள், அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர் மோதிக்கொண்டால் விருதுநகர் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அரசு போக்குவரத்து கழக டிரைவர் மற்றும் கண்டக்டரை கல்லூரி மாணவர்கள் தாக்கிய தகவல் மற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து விருதுநகர் பஸ் நிலையம் மற்றும் நகரப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களை டிரைவர்கள், கண்டக்டர்கள் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை மாணவர்கள் தாக்கிய பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதன் காரணமாக விருதுநகரில் சுமார் ஒரு மணி நேரம் அரசு பஸ்கள் இயக்ககப்படவில்லை. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜ சுலோசனா, தென்றல், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இருந்தபோதிலும் அவர்கள் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பஸ்களில் செல்ல முடியாமல் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் விருதுநகர் பஸ் நிலையத்தில் வெகுநேரம் காத்து நின்றனர்.
தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்களை இயக்கினர். அதன் பின்னரே பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.
மேலும் தாக்குதலில் ஈடுபட்ட 4 மாணவர்களையும் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் 4 மாணவர்களும் உன்னிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களில் 2 மாணவர்கள் விருதுநகரில் உள்ள கல்லூரியிலும், 2 மாணவர்கள் சிவகாசியில் உள்ள கல்லூரியிலும் படித்து வருகின்றனர் என்பதும் தெரியவந்தது.
மாணவர்கள் தாக்கியதில் காயமடைந்ததாக கூறி அரசு பஸ் டிரைவர்கள் ஜெயராமன், பெரியகருப்பன், கண்டக்டர் முத்துராஜா ஆகிய 3 பேரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.