இஸ்ரேல்-பாலஸ்தீனம் தொடர்பான பிரச்னை மற்றும் இஸ்ரேலிய ராணுவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றபோது, அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஷீரின் அபு அக்லே என்ற பெண் பத்திரிகையாளர், இஸ்ரேல் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஷீரின் அபு அக்லேவை வேண்டுமென்றே இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கத்தார் நாட்டின் அரசு செய்தி சேனலான அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே மேற்குகரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில் பல வருடங்களாக மோதல் தொடர்கிறது. இந்தப் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. அதில் வாழ்ந்து வரும் பாலஸ்தீன மக்கள், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பாலஸ்தீன பயங்கரவாதிகளைப் பிடிப்பதாகக் கூறி இஸ்ரேலிய ராணுவம் அடிக்கடி பாலஸ்தீன மக்களை அச்சுறுத்துவதும், சுட்டுக் கொல்வதும் அங்கே தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், பாலஸ்தீனிய அமெரிக்கரும், முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவருமான 51 வயதான ஷிரீன் அபு அக்லே, மேற்குக்கரை பகுதியான ஜெனின் நகரில் பாலஸ்தீன அகதிகள் முகாமுக்குள் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உட்புகுந்தது குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர் உடை மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்த போதும் இஸ்ரேலிய படைகள் அவரை சுட்டுள்ளனர் என்கின்றன சாட்சியங்கள். பலரும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அபு அக்லேவை சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறி வேண்டுமென்றே குறிவைத்துக் கொன்றதற்கு இஸ்ரேலியப் படைகள் பொறுப்பேற்க வேண்டும் என்று அல் ஜசீரா சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.