பனியன் கம்பெனியில் சனியன்ஸ்… காதலுக்காக ஏவிய கூலிப்படை உயிரின் விலை ரூ 6 லட்சம்..!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பனியன் கம்பெனி பெண் டெய்லர் மீது கொண்ட காதலால், கூலிப்படையை ஏவி அந்தப் பெண்ணின் கணவரைக் கொலை செய்ததாக பனியன் கம்பெனி மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் கோபால். கொடைக்கானலை பூர்வீகமாக கொண்ட இவர் தனது மனைவி சுசீலா மற்றும் இரு குழந்தைகளுடன் தண்ணீர்பந்தலில் வசித்து வந்தார்.

சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த கோபால் கடந்த 4 ஆம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று, கோபாலை சுற்றி வளைத்து கழுத்து,வயிறு,மார்பு உள்ளிட்ட இடங்களில் 13 இடங்களில் குத்தியதில் கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலையாளிகள் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் சஷாங் சாய் உத்தரவின் பேரில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கோபாலின் சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கை விசாரித்த போலீசார், கோபால் மனைவியின் செல்போன் எண்ணை பெற்று அவரது தொடர்புகளை ஆய்வு செய்தனர்.

அதில் கோபால் மனைவி சுசீலா , முன்பு வேலை பார்த்த பனியன் நிறுவன மேலாளர் மாரீஸிடம் நீண்ட நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாரீஸை பிடித்து விசாவிசாரித்த போது கொலைக்காண மர்மம் விலகியது.

மாரீஸ் வேலைபார்க்கும் அதே பனியன் நிறுவனத்தில் டெயிலராக 3 வருடம் வேலை பார்த்து வந்ததால் அவருடன் சுசீலாவுக்கு, ரகசிய தொடர்பு இருந்து வந்துள்ளது. மனைவி சுசிலாவின் ‘திருமணம் கடந்த காதல்’ விவகாரம் தெரிந்ததால் அவரை கடந்த 6 மாதத்திற்கு முன்பு வேலைக்கு அனுப்ப மறுத்த கோபால், தனது மனைவி பயன்படுத்தி வந்த செல்போனையும் பறித்து வைத்து வீட்டிலேயே இருக்க செய்துள்ளார்.

கோபால் வேலைக்கு சென்ற பின்னர், மாரீஸை சந்தித்து காதலை வளர்த்து வந்த சுசீலா, ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாரீஸிடம் வற்புறுத்தி உள்ளார்.

தாங்கள் இருவரும் பேசிக் கொள்வதற்கு வசதியாக ரகசியமாக மாரீஸ் ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது தங்கள் காதலுக்கு இடையூறாக உள்ள கோபாலை கொலை செய்ய இருவரும் சேர்ந்து முடிவு செய்துள்ளனர்.

கூலிப்படையை ஏவி கொலை செய்யத் திட்டமிட்டு தனது கார் ஓட்டுனருக்கு தெரிந்த குளித்தலையை சேர்ந்த கூலிப்படை கும்பல் ஒன்றை 6 லட்சம் ரூபாய்க்கு ரேட் பேசி களத்தில் இறக்கிய மாரீஸ் முன் பணமாக 2 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.

அதன்படி கோபாலை இரு தினங்கள் நோட்டமிட்ட கூலிப்படை கும்பல், கடந்த 4ம் தேதி கோபால் வேலையை முடித்து வீடு திரும்பும் போது அவரை பின் தொடர்ந்து வந்த கூலிப்படை கும்பல் கத்தியால் குத்தி கோபாலை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மாரீஸ்,கூலிப்படையை சேர்ந்த விஜய்,மணிகண்டன்,
உலகேஸ்வரன்,மதன்குமார், விநோத் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கொலை சம்பவத்திற்கு பின்னர் தலைமறைவாக இருந்த கோபாலின் மனைவி சுசீலாவும் கைது செய்யப்பட்டார்.

கணவன் மனைவிக்கிடையே பேசி தீர்க்க இயலாத பிரச்சனை என்றால் பிரிந்து சென்று இருக்கலாம்- அதை விடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டால் ஜெயிலில் கம்பி எண்ணும் நிலைதான் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.