பாகிஸ்தான் டு இந்தியா; சைக்கிள் டு மோட்டார் பைக்; ஹீரோ மோட்டார்ஸின் சாகசப் பயணம்! திருப்புமுனை – 11

தற்போது இரு சக்கர வாகன விற்பனையில் முதல் இடத்தில் இருக்கும் ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் வரலாற்றை உற்று கவனித்தால், அதில் பலவிதமான திருப்புமுனைகள் குவிந்துகிடப்பதை நாம் பார்க்கலாம். அந்தத் திருப்புமுனைகளை பற்றி விரிவாகப் பார்ப்போம்…

தொலைநோக்கு சிந்தனை

தொலைநோக்கு சிந்தனை, காலம் தாண்டி யோசித்து வெற்றி கண்டவர் என்றெல்லாம் நாம் கேள்விபட்டிருப்போம். இன்றைக்கு இணையதளம், தொலைக்காட்சி என தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், எந்த விதமான தகவல்களும் இல்லாமல் ஒரு மிகப்பெரிய முடிவை எடுத்து ஜெயித்திருக்கிறது ஹீரோ குழுமம்.

பாகிஸ்தான் டு இந்தியா…

தற்போது பாகிஸ்தான் வசம் உள்ள கமாலியா என்னும் இடத்தில்தான் முஞ்சால் குடும்பத்தினர் வசித்து வந்தனர். லைலாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்த பகுதி விவசாயம் செழிப்பாக இருந்த இடம். இரண்டாம் உலகப்போர் சமயத்திலே இந்தியாவில் இருந்து வெளியேற பிரிட்டீஷ் அரசு திட்டமிட்டது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை வேண்டும் என்பதில் முஸ்லீம் லீக்கும் உறுதியாக இருந்தது.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்பதும் உறுதி. அதேபோல, பிரிவினையும் உறுதி. ஒருவேளை, இந்தியா – பாகிஸ்தான் பிரிக்கப்பட்டால், பெரும்பான்மையான முஸ்லீம்கள் வாழும் கமாலியா பகுதி பாகிஸ்தான் வசம் செல்லக்கூடும். அப்போது அங்கு இந்துகளுக்கும், சீக்கியர்களும் இடமில்லை என்பதை முஞ்சால் குடும்பத்தினர் உணர்ந்தனர்.

ஹீரோ

எனவே, கமாலியாவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அமிர்தசரஸுக்கு செல்ல முடிவு செய்தது முஞ்சால் குடும்பம். அங்கு சீக்கியர்கள் அதிகம். அந்தப் பகுதி இந்தியா வசம் இருக்கும் என குடும்பத் தலைவர் முஞ்சாலின் அப்பா சொல்ல, அந்த யோசனையை ஏற்றுக்கொள்ள குடும்பம் மறுத்துவிட்டது. விடாப்பிடியாக இருந்த சுனில் காந்த அப்பா, குறைந்தபட்சம் குடும்பத்தில் சிலராவது அமிர்தசரஸில் இருக்கவேண்டும். தேவைப்பட்டால் நாம் அங்கு செல்லலாம். எதுவும் நடக்கவில்லை எனில், இங்கேயே இருந்துவிடுவோம் என்று சொல்ல, அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது 1947-ல். ஆனால், முஞ்சால் சகோதரர்களில் சிலர் 1944-ம் ஆண்டே அமிர்தசரஸுக்குப் புலம்பெயர்ந்துவிட்டனர். அப்போது இந்திய சாலைகளில் சைக்கிள் மட்டுமே முக்கிய வாகனம் என்பதால், சைக்கிளுக்குத் தேவையான உதிரிபாகங்களை விற்பனை செய்யும் கடையை அமிர்தசரஸில் தொடங்குகின்றனர். இந்தியப் பிரிவினையால் முஞ்சால் குடும்பம் இந்திய எல்லைக்குள் வந்துசேர்ந்தது.

ஹீரோ சைக்கிள் உதயமானது…

இந்தியாவுக்கு வந்த முஞ்சால் குடும்பம் சைக்கிள் உதிரிபாகங்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்துவந்தது. அப்போது சைக்கிள் என்பது ஒரு போக்குவரத்து வாகனம் சைக்கிள் என்பதால், சைக்கிள் தயாரிக்க முஞ்சால் சகோதரர்கள் திட்டமிடுகின்றனர். அப்போது சைக்கிள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் மற்றும் ஆலையைத் தேடுவதற்காக பலரையும் சந்திக்கின்றனர். அந்த சூழலில், சைக்கிளின் இருக்கையைத் தயாரிக்கும் கரீம் தீன் என்பவரை சந்திக்கின்றனர்.

முஞ்சால் குடும்பம் எப்படி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்ததைப் போல, கரீம் தீன் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லத் திட்டமிட்டிருந்தார். அவர் தன்னுடைய தொழிலைக் கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு பாகிஸ்தான் செல்லத் திட்டமிட்டார். அவர் வசமிருந்து வாங்கிய பிராண்ட்தான் ஹீரோ. அதிலிருந்து உருவானாதுதான் ஹீரோ சைக்கிள். அப்போது இந்தியாவில் அட்லஸ், ஹெர்குலிஸ் உள்ளிட்ட பிராண்டுகள் இருந்தன.

சைக்கிள்

1956-ம் ஆண்டு ஹீரோ சைக்கிள் தொடங்க உரிமம் வழங்கப்பட்டது. 50,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் முதல் ஆண்டு 639 சைக்கிள் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்தியா முழுவதும் டீலர்களின் எண்ணிகையை மற்றும் விற்பனையை உயர்த்தியது ஹீரோ. ஓர் ஆண்டில் 500 டீலர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள்.

ஹீரோ நிறுவனம் சிறிய நிறுவனமாக இருந்தாலும் 1959-ம் ஆண்டே ஜெர்மனியில் இருந்து தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்தது. இரண்டே ஆண்டுகளில் சைக்கிள் பிரிவில் முதல் இடத்துக்கு வந்தது ஹீரோ. 1975-ம் ஆண்டு சமயத்தில் வருடத்துக்கு ஐந்து லட்சம் சைக்கிள்களைத் தயாரித்தது.

சைக்கிள் டு மொபட்…

சைக்கிளுக்கு அடுத்து மொபட்டில் கவனம் செலுத்தியது ஹீரோ. அப்போது கைனடிக் நிறுவனத்தின் லூனா மற்றும் டிவிஎஸ்50 ஆகியவை முக்கிய பிராண்டுகளாக இருந்தன. இத்தாலியைச் சேர்ந்த பியாஜியோ நிறுவனத்தின் இணைந்து மொபட் தயாரிக்க திட்டமிட்டது . ஆனால், அப்போது விதிமுறைகள் காரணமாக இந்த இணைப்பு சாத்தியமாகவில்லை. அதனால் உள்நாட்டிலே தயாரிக்கும் முடிவெடுக்கப்பட்டது.

ஹீரோ மெஜஸ்டிக் என்னும் மொபட் 1975-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் முக்கியமான பிராண்டாக மெஜஸ்டிக் மாறியது. தவிர, ஆப்பிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலும் பிரபலமாகத் தொடங்கியது. 1981-ம் ஆண்டு மொபட் மற்றும் சைக்கிள் ஆகிய இரு பிரிவுகளிலும் ஹீரோ முதல் இடத்தைப் பிடித்தது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R

ஆனால், வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்னும் இலக்கு ஹீரோவுக்கு இருந்துகொண்டே இருந்தது. 100 சிசிக்கு உள்ளான வாகனங்களில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டாக செயல்பட மத்திய அரசும் அனுமதி வழங்கியது. பிசினஸ் சிறப்பாக செயல்படும் இந்த நேரத்தில் வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைவது தேவையில்லாத வேலை என்றே பலரும் கருதினார்கள்.

ஹோண்டாவுடன் கூட்டணி…

ஆனால், ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது ஹீரோ. இதேபோல, 140 விண்ணப்பங்கள் ஹோண்டாவுக்கு வந்தன. ஆனால், ஹீரோவுடன் இணைவதற்கு ஹோண்டா விருப்பம் தெரிவித்தது. இதில் முக்கியமான திருப்புமுனை என்னவெனில், ஸ்கூட்டர் பிரிவில் ஹோண்டாவுடன் இணைய வேண்டும் என்பது ஹீரோவின் விருப்பம். ஆனால், மோட்டார் சைக்கிள் பிரிவில் இணையலாம் என ஹோண்டா விருப்பம் தெரிவித்தது. (ஸ்கூட்டர் பிரிவுக்கு வேறு நிறுவனத்துடன் இணைய முடிவு செய்திருந்தது ஹோண்டா!).

ஹோண்டா

அடுத்து என்ன செய்வது என ஹீரோ குழுமத்துக்குப் புரியவில்லை. மோட்டார் சைக்கிள் குறித்து தெரியாது. அதற்கான சந்தை இருக்கிறதா என தெரியாது. இருந்தாலும் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கலாம் என்பதால், மோட்டார் சைக்கிளை இணைந்து தயாரிக்க ஹீரோ முடிவெடுத்தது. சைக்கிளில் வெற்றி, மொபட்டில் வெற்றி, மோட்டர் சைக்கிளையும் பார்த்துவிடுவோம் என களம் இறங்கியது ஹீரோ. 1983-ம் ஆண்டு டிசம்பரில் ஹீரோவுக்கும் ஹோண்டாவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டு நிறுவனம் 1984-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது.

ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் முதல் மாடலான சிடி 100 உருவாக்கப்பட்டபோது, ஒரு லிட்டருக்கு 100 கிலோ மீட்டர் செல்லுமாறு வடிவமைக்க வேண்டும் என்பதுதான் திட்டம். ஆனால், 80 கிமீ வரை செல்லுமாறு வடிவமைக்கப்பட்டது. 10,000 ரூபாய்க்குக்கீழே இருக்குமாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதுவரை இந்திய சாலைகளில் ஸ்கூட்டர் மட்டுமே இருந்த சூழலில் புதிய சந்தையை உருவாக்கியது ஹீரோ ஹோண்டா.

1999-ம் ஆண்டு ஸ்ப்ளண்டர் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவரை மார்க்கெட் லீடராக இருந்த பஜாஜை, 2001-ம் ஆண்டு ஹீரோ ஹோண்டா முந்தியது. அந்த ஆண்டு 10 லட்சம் வாகனங்கள் என்னும் இலக்கினை எட்டியது. பேஷன், சிடி டான் என பல புதிய மாடல்களை சந்தைக்கு அறிமுகம் செய்தது.

ஹோண்டாவுடன் கூட்டணி முறிவு…

ஹீரோ ஹோண்டா கூட்டணி, சந்தையில் பெரிய வெற்றி பெற்றாலும் 26 ஆண்டுகளுக்குப்பிறகு (2010) இந்த கூட்டணி பிரிந்தது. இதற்கு சந்தையில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஹீரோ ஹோண்டாவும் ஏற்றுமதி செய்வதால் சிக்கல் உருவானது. ஹீரோ நிறுவனம் சொந்தமாக புராடக்ட்டுகளை அறிமுகம் செய்யவேண்டும் என திட்டமிட்டது. ஆனால், ஒவ்வொரு அறிமுகத்துக்கும் ஜப்பானில் இருந்து அனுமதி தேவை என்னும் சூழல் இருந்தது.

ஹீரோ பேஸன் ப்ரோ

ஹீரோ ஹோண்டா என்னும் நிறுவனம் 1983-ம் ஆண்டு முதல் இந்தியாவில் செயல்பட்டாலும் 1999-ம் ஆண்டு ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் என்னும் இந்திய துணை நிறுவனத்தை ஹோண்டா தொடங்கியது. இந்த நிறுவனம் மூலம் 110 சிசி வாகனத்தை வெளியிட ஹோண்டா திட்டமிட்டது. இதுபோன்ற சில காரணங்களால் இரு நிறுவனங்களுக்கும் இடையேயான ஒப்பந்தம் 2010-ம் ஆண்டு முறிந்தது. முஞ்சால் குடும்பம் ஹோண்டா பங்குகளை வாங்கிக்கொண்டது.

10 கோடி வாகனங்கள் இலக்கு…

ஹோண்டாவின் பங்குகளை வாங்கியபிறகு ஹீரோ நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது. ஹோண்டா இல்லை எனில், ஹீரோ இல்லை என்னும் விமர்சனங்கள் இந்தியச் சந்தையில் இருந்தன. ஆனால், இந்த விமர்சனங்களைத் தவிடுபொடியாக்கி தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது ஹீரோ. கடந்த ஆண்டு ஐந்து கோடி வாகனங்கள் என்னும் இலக்கை ஹீரோ எட்டியது. 2030-ம் ஆண்டுக்குள் 10 கோடி வாகனங்கள் என்னும் இலக்குடன் செயல்படுவதாக கடந்த ஆண்டு சுனில் காந்த் முஞ்சால் தெரிவித்தார்.

ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

150 சிசி-க்கும் மேலான வாகனச் சந்தை பிரிவில் கவனம் செலுத்ததாது, ஹீரோ குடும்பத்துக்குள் சமீபத்தில் நிலவும் குடும்பப் பிரச்சினைகள் (எலெக்ட்ரிக் வாகன பிரிவுக்கான பெயரை யார் பயன்படுத்துவது) என பல சிக்கல்கள் இருந்தாலும் கடந்த நிதி ஆண்டில் இரு சக்கர வாகன பிரிவில் 34% சந்தையைப் பிடித்து முதல் இடத்தில் இருக்கிறது ஹீரோ.

சைக்கிள், மொபட், ஸ்கூட்டர், இவி என காலத்துக்கேற்ப தன்னை புதுப்பித்துக்கொண்டே இருந்திருக்கிறது ஹீரோ.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.