கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பொன்முடி பேசும்போது, “இன்று 1,04,281 பெண்கள் பட்டம் பெறுகின்றனர். அந்த அளவுக்கு உயர்கல்வித்துறை துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என பாரதியார் பாடியிருக்கிறார். முதல்வர் போடும் திட்டங்களைப் பார்த்தால் அனைத்திலும் பெண்கள்தான் இருப்பார்கள். ஆண்களுக்கு சலிப்புதட்டும் அளவுக்கு பெண்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
பெண்கள் படிப்பில் ஆர்வமாக இருக்கின்றனர். ஒருகாலத்தில் பெண்கள் படிக்கவே கூடாது என்று சமூகம் இருந்தது. எல்லாரும் படிக்க வேண்டும் என்கிற உணர்வை உருவாக்கியிருக்கிறோம். ஆண்களைவிட பெண்கள் உயர்கல்வி படிக்கின்றனர். இதைத்தான் திராவிட மாடல் என்கிறோம்.
இது பெரியார் மண். இருமொழிக் கொள்ளையே தமிழ்நாடு அரசின் கொள்கை. மாணவர்கள் விரும்பும் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். தமிழக மக்களின் உணர்வுகளை ஆளுநருக்கு தெரியப்படுத்தவே இதைக் கூறுகிறேன்.
இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனப் பலர் சொல்கின்றனர். ஆனால் வேலை கிடைக்கிறதா? கோவையில் பானிபூரி கடை நடத்துபவர்கள் யார்? நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தியை கட்டயமாக்கக்கூடாது என்றுதான் சொல்கிறோம்.
புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயாராக இருக்கறோம். தமிழ்நாடு கல்விக் கொள்கை நிறுவ முதலமைச்சர் குழு அமைத்திருக்கிறார். தமிழ்நாட்டின் பிரச்னைகளை ஆளுநர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்” என்றார்.