தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மின்வேலி அமைக்கப்பட்ட நெல்வயலில் நுழைய முயன்ற மக்னா காட்டு யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது.
பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த நல்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் (52). இவர் தனது நிலத்தில் நெல் நடவு செய்துள்ளார். இவரது விவசாய நிலம் வனத்தை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நிலத்தில் இரவில் வனவிலங்குகள் நுழைவதைத் தடுக்கும் நோக்கத்துடன் வயலின் மையத்தில் மின் இணைப்பு ஏற்படுத்தி விளக்கு ஒன்றை அமைத்து இரவில் வெளிச்சம் இருக்கும் வகையில் செய்திருந்தார். இந்த நிலையில், 12ம் தேதி(வியாழன்) நேற்றிரவு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள காப்புக்காட்டில் இருந்து கீழிறங்கிய 40 வயதுடைய மக்னா யானை ஒன்று சீனிவாசனின் வயலில் நுழைந்துள்ளது.
எதிர்பாராத விதமாக அவர் வயலில் மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்த மின் பாதையில் மோதிய யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் யானை அதே இடத்தில் உயிரிழந்தது. தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, வனப் பாதுகாவலர் பெரியசாமி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அதைத் தொடர்ந்து, பாலக்கோடு வனச் சரகர் செல்வம் தலைமையிலான வனத்துறையினர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வனத்துறைக்கான கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினரை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் யானையின் உடல், வனத்துறை விதிகளின்படி அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விவசாயி சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறும்போது, “காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் இரவு நேரங்களில் விளைநிலங்களில் நுழைவதால் பயிர்கள் சேதமடைவது வழக்கம். இதை தடுக்கும் நோக்கத்துடன் விவசாயிகள் சிலர் தங்கள் விளைநிலங்களில் இரவில் வெளிச்சம் தரும் வகையில் மின்சார இணைப்பு மூலம் பல்புகளை எரிய விடுகிறோம். அவ்வாறு இரவில் வெளிச்சம் நிலவும் பகுதிகளில் வனவிலங்குகள் நுழைவது குறைவதால் இவ்வகை ஏற்பாடுகளை பின்பற்றுகிறோம்.
நிலத்தில் நுழையும் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் என தெரிந்திருந்தும்கூட அவற்றை தடுக்கும் நோக்கத்துடன் மின்வேலி அமைப்பது குற்றச்செயல் வகையில் சேரும். ஆனால், இரவில் வெளிச்சம் உருவாக்கி அதன்மூலம் வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த விவசாயிகளின் நடவடிக்கையில் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுத்த வேண்டும் என துளியும் நோக்கம் இருப்பதில்லை. இவ்வகை மின் வயர்களில் விலங்குகள் சிக்கி உயிரிழப்பு நிகழ்வது என்பது யாரும் எதிர்பாராதது. இதற்காக சம்பந்தப்பட்ட விவசாயிகள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது என்பது, விவசாயிகளை அந்த தொழிலில் இருந்து வலிந்து வெளியேற்றும் வகையிலான செயல். இதுபோன்ற விவகாரங்களுடன் பொருந்தும் வனத்துறை சட்டங்களில் காலத்துக்கும், சூழலுக்கும் ஏற்ற மேம்பாட்டை செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.